கோவில் பூசாரி மனைவி தலை துண்டித்து கொலை


கோவில் பூசாரி மனைவி தலை துண்டித்து கொலை
x
தினத்தந்தி 7 Jan 2018 4:45 AM IST (Updated: 7 Jan 2018 1:49 AM IST)
t-max-icont-min-icon

ஆவுடையார்கோவில் அருகே கோவில் பூசாரி மனைவியை தலை துண்டித்து கொலை செய்து, உடலை எரித்து விட்டு தப்பிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆவுடையார்கோவில்,

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள கரூர் ஊராட்சியை சேர்ந்த குமுளூர் கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் குமுளூரில் உள்ள காளிகோவிலில் பூசாரியாக வேலைபார்த்து வருகிறார். சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்த காளிமுத்து, தற்போது இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்றுள்ளார். இவரது மனைவி கனகாம்பாள் (வயது 48). இவர்களுக்கு கருணாகரன் என்ற மகனும், புவனேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். கருணாகரன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

புவனேஸ்வரி சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். காளிமுத்துவின் மனைவி கனகாம்பாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து மதத்தில் இருந்து வேறு மதத்திற்கு மாறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கனகாம்பாள் நேற்று முன்தினம் இரவு வீட்டு கதவை பூட்டிவிட்டு உள்ளே கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது நேற்று அதிகாலை 3 மணி அளவில் மர்மநபர்கள் சிலர் வீட்டின் பின்பக்க கதவை நைசாக உடைத்து வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் தூங்கி கொண்டிருந்த கனகாம்பாளை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் அவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

மேலும் ஆத்திரம் தீராத மர்மநபர்கள் அவரது தலையை அரிவாளால் வெட்டி துண்டாக்கினர். இதனால் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக கனகாம்பாள் இறந்தார். பின்னர் அவரது தலையையும், உடலையும் ஒன்று சேர்த்து மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து எரித்து விட்டு மர்மநபர்கள் தப்பி சென்று விட்டனர்.

இதனால் கனகாம்பாள் வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு கனகாம்பாள் வெட்டி கொலை செய்யப்பட்டு, உடல் பாதி எரிந்து பாதி எரியாத நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ந்தனர். வீடு முழுவதும் ரத்தக்கறை சிதறி கிடந்தது. இதுகுறித்து கரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தெட்சிணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் முத்துக்கண்ணு, பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கனகாம்பாளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கொலை சம்பவம் குறித்து கரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்திற்காக கொலை நடந்ததா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, கொலை செய்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story