மாவட்டம் முழுவதும் 3–வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மாவட்டம் முழுவதும் 3–வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், தற்காலிக டிரைவர்கள் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டன.
திண்டுக்கல்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3–வது நாளாக நேற்றும் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை காலையில் 10 சதவீத அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் இருந்து அதிக அளவில் தனியார் பஸ்களே இயக்கப்பட்டன.
குறிப்பாக நத்தம், மதுரை, திருச்சி, பழனி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் தனியார் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. மேலும் பஸ்சுக்காக மக்கள் பஸ் நிலையத்தில் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதையடுத்து அண்ணா தொழிற்சங்கத்தினர் தங்களுடைய சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்களை பணிக்கு வரும்படி அழைத்தனர்.
மேலும் தற்காலிக டிரைவர்களை கொண்டு பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர். அதேநேரம் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் வெற்றிபெற ஒத்துழைக்க வேண்டும் என்று சக ஊழியர்களிடம் கூறியபடி இருந்தனர். இதனால் பல ஊழியர்கள் குழப்பம் அடைந்தனர். எனினும், ஒருசிலர் பணிக்கு வந்தனர்.
இந்த நிலையில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க. நிர்வாகிகள், போக்குவரத்து கழக அதிகாரிகள் திண்டுக்கல் பஸ் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் எந்த ஊருக்கு செல்வதற்கு மக்கள் அதிகமாக நிற்கிறார்கள்? என்று கேட்டனர். அதையடுத்து அந்த ஊர்களுக்கு செல்வதற்கு அரசு பஸ்களை வரவழைத்தனர்.
இதனால் நத்தம், மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு மதியத்துக்கு பின்னர் பஸ்கள் ஓடத்தொடங்கின. அந்த பஸ்களை அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள், தற்காலிக டிரைவர்கள் ஓட்டி சென்றனர். அந்த வகையில் ஏற்கனவே வேலைநிறுத்த போராட்டம் நடந்த போது பஸ்களை ஓட்டியவர்கள், தனியார் பஸ் டிரைவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இதேபோல் திண்டுக்கல், பழனி, வத்தலக்குண்டு, வேடசந்தூர் உள்பட மாவட்டத்தில் பல இடங்களில் தற்காலிக டிரைவர்கள், அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் நேற்று 40 சதவீத அரசு பஸ்கள் ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு பஸ்கள் முழுமையாக இயக்கப்படாத காரணத்தால் பல ஊர்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. காலை, இரவு நேரங்களில் தனியார் பஸ்களையே மக்கள் முழுமையாக நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சில தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. உதாரணமாக திண்டுக்கல்–மதுரைக்கு ரூ.37 கட்டணம் ஆகும். ஆனால், தற்போது தனியார் பஸ்களில் ரூ.40 வசூலிக்கப்பட்டதாகவும், திண்டுக்கல்–வத்தலக்குண்டுக்கு ரூ.22–க்கு பதிலாக ரூ.25 வசூலிக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் கூறினர். இதுதொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.