11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஜாக்டோ–ஜியோ சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது
திண்டுக்கல்,
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஜாக்டோ–ஜியோ சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுகந்தி, ஜோசப்சேவியர் ஆகியோர் தலைமை தாங்கினர். மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் மோசஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பேட்ரிக், குன்வர் மற்றும் சண்முகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்.
மேலும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் ஊராட்சி செயலாளர், தொகுப்பூதிய மற்றும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அதேபோல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது நீதிமன்ற உத்தரவை மீறி நடவடிக்கை எடுப்பதை கைவிட வேண்டும். ஒரு மாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும் என்பன உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.