திருச்சி மாவட்டத்தில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டன


திருச்சி மாவட்டத்தில் குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டன
x
தினத்தந்தி 7 Jan 2018 4:15 AM IST (Updated: 7 Jan 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் நேற்று குறைந்த அளவு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் ஷேர் ஆட்டோக்களில் கூட்டம் அலைமோதியது.

திருச்சி,

போக்குவரத்து தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சு வார்த்தையில் இன்னும் முடிவு ஏற்படாததால் அரசு பஸ் ஊழியர்கள் கடந்த 4-ந் தேதி இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சியிலும் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன்தினம் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

3-வது நாளான நேற்றும் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்களை வைத்து நேற்று திருச்சி மாவட்டத்தில் குறைந்த அளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

இதனால் கடந்த 2 நாட்களாக அவதிப்பட்டு வந்த பொது மக்கள் நேற்று ஓரளவு நிம்மதி அடைந்தனர். பஸ்கள் ஓரளவு இயக்கப்பட்டாலும் எப்போதும் பயணிகள் கூட்ட நெரிசலில் பரபரப்பாக காணப்படும் திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் குறைந்த அளவு பயணிகளே காணப்பட்டதால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடின.

குறிப்பாக அரசு டவுன் பஸ்கள் மிகக்குறைந்த அளவே இயக்கப்பட்டன. இதனால் தனியார் டவுன் பஸ்களில் அதிகளவு கூட்டம் இருந்தது. இதனால் மாநகர பகுதிகளுக்கு செல்ல பொது மக்கள் அவதிப்பட்டனர்.

எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர், கருமண்டபம், பிராட்டியூர், உறையூர், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானவர்கள் ‘ஷேர்’ ஆட்டோக்களில் பயணம் செய்தனர். இதனால் மத்திய பஸ் நிலையம் அருகே ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தும் இடமான தேவர் சிலை அருகே பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் ராஜாமணி மத்திய பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகளுடன் நிலவரம் குறித்து விவரம் கேட்டறிந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் தினமும் 758 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பல தொழிலாளர்கள் பணிக்கு வராததால் மற்றவர்களை வைத்து இன்று (நேற்று) மதியம் 12 மணி அளவில் 415 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளன. அதே போன்று 93 அரசு விரைவு பஸ்சில் 3 பழுதாகி உள்ளது. மீதி உள்ள 90-ல் மதியம் வரை 32 பஸ்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு உள்ளன. தற்காலிகமாக 224 டிரைவர்கள், 196 கண்டக்டர்கள் பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

உப்பிலியபுரம் பகுதியில் நேற்று மூன்றாவது நாளாக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினாலும், பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டன. உப்பிலியபுரம் பணிமனையில் நேற்று 9 பஸ்கள் மட்டும் இயங்கவில்லை. 36 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் 10 பேர், 5 பஸ்களையும், ஓட்டுனர், நடத்துனர் உரிமம் உள்ள 52 தற்காலிக தொழிலாளர்கள் 26 பஸ்களையும் இயக்கினர். பச்சைமலைக்கு ஆத்தூரில் இருந்து ஒரு மினி பஸ்சும், உப்பிலியபுரம் டெப்போவில் இருந்து ஒரு மினி பஸ்சும் இயக்கப்பட்டதால், மலைவாழ் மக்கள் சிரமமின்றி பயணம் செய்தனர். அரசு பணிமனை முன்பு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

திருச்சியில் நடந்த பொங்கல் பரிசு தொகுப்பு-விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் விழாவில் பங்கேற்ற பிறகு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அரசு பஸ்களை முழு அளவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


Next Story