நிலமோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக சென்னையில் கடந்த ஆண்டு 559 பேர் கைது
நிலமோசடி, திருட்டு வி.சி.டி. விற்பனை, விபசாரம் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக சென்னையில் கடந்த ஆண்டு 559 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை போலீஸ் துறையின் முக்கிய அங்கமான மத்திய குற்றப்பிரிவு, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரடி கட்டுப்பாட்டில், கூடுதல் கமிஷனர் மற்றும் 2 துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் இயங்கி வருகிறது.
மத்திய குற்றப்பிரிவில் நிலமோசடி, கந்துவட்டி, திருட்டு வி.சி.டி. விற்பனை, ‘சைபர் கிரைம்’ உள்பட பல்வேறு குற்றங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2017-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவில் 572 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. புலன் விசாரணை மேற்கொண்டு 559 பேர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 57 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூ.8 கோடி திருட்டு வி.சி.டி.க்கள்
‘ஆன்-லைன்’ வங்கி மோசடி பிரிவில் பதிவு செய்யப்பட்ட புகார்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரூ.3 கோடியே 58 லட்சத்து 15 ஆயிரத்து 687 திரும்ப பெற்று தரப்பட்டது.
திருட்டு வீடியோ தயாரிப்பு மற்றும் விற்பனை தொடர்பாக 243 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. அவர்களிடம் இருந்து ரூ.8 கோடியே 70 லட்சத்து 68 ஆயிரத்து 600 மதிப்பிலான ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 284 வி.சி.டி.க்களும், 80 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
357 பெண்கள் மீட்பு
விபசார தடுப்பு பிரிவில் 198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 288 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 22 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. 357 பெண்கள் மீட்கப்பட்டனர். இதில் 39 பேருக்கு மறுவாழ்வு நிவாரண தொகையாக ரூ.3 லட்சத்து 90 ஆயிரம் வழங்கப்பட்டது.
விபசார தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட 10 கார்கள், 30 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர்கள் மல்லிகா, செந்தில் ஆகியோரும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
Related Tags :
Next Story