தற்காலிக டிரைவர்கள் நியமனம்: தஞ்சை மாவட்டத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் ஓடின


தற்காலிக டிரைவர்கள் நியமனம்: தஞ்சை மாவட்டத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் ஓடின
x
தினத்தந்தி 7 Jan 2018 4:30 AM IST (Updated: 7 Jan 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

தற்காலிக டிரைவர்களை நியமித்ததால் தஞ்சை மாவட்டத்தில் 80 சதவீத அரசு பஸ்கள் ஓடின. தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பயணிகள் வாக்குவாதம் செய்தனர்.

தஞ்சாவூர்,

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 3-வது நாளாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மக்கள் அவதிப்படுவதை நினைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தும், பணிக்கு திரும்பாவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்தும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை திரும்ப பெறவில்லை.

இந்த போராட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிகமாக டிரைவர், கண்டக்டர்களை நியமித்து அரசு பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பதிவு செய்தவர்களை அழைத்து ஒவ்வொரு பணிமனைக்கு சென்று பஸ்களை ஓட்டும்படி அறிவுரை வழங்கப்பட்டது. ஒவ்வொரு பணிமனையிலும் 10 முதல் 20 டிரைவர்கள் வரை தற்காலிகமாக நியமிக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் அண்ணா தொழிற்சங்கத்தினரும் பஸ்களை இயக்கி வருகிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் 12 பணிமனைகள் உள்ளன. இவற்றில் இருந்து 528 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போராட்டம் காரணமாக காலையில் பெரும்பாலான பஸ்கள் பணிமனையில் இருந்து இயக்கப்படாமல் இருந்தது. ஆனால் நேரம் ஆக, ஆக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமாலை நேர நிலவரப்படி 82 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் தனியார் பஸ்கள், மினிபஸ்கள், ஷேர்ஆட்டோக்களும் அதிக அளவில் இயக்கப்பட்டன.

மினிபஸ்களில் ரூ.2 முதல் ரூ.4 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மதுரையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த தனியார் பஸ்களில் கூடுதலாக ரூ.30 கட்டணம் வசூலிக்கப்பட்டது. சில பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த முடியாது என கண்டக்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அப்படி வாக்குவாதம் செய்தவர்களிடம் கூடுதலாக ரூ.10 வரை வசூலித்தனர். இதேபோல திருச்சி, கும்பகோணம் நோக்கி சென்ற தனியார் பஸ்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலோ, பணிமனை முன்பு கூடி நின்றாலோ கைது செய்வோம் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் தஞ்சை நகர்கிளை-1, நகர்கிளை-2, புறநகர்கிளை, அரசு விரைவு போக்குவரத்து கழக கிளை ஆகியவற்றை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் கூடி ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை நிர்வாகிகள் ஜெய்வேல்முருகன், அன்பரசன், ராஜேந்திரன், சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் முருகன், ராமசாமி, ஏ.ஐ.டி.யூ.சி. நிர்வாகிகள் துரை.மதிவாணன், சுந்தரபாண்டியன், தாமரைச்செல்வன், த.மா.கா. தொழிற்சங்க நிர்வாகி சந்திரசேகரன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி மோகன்ராஜ் மற்றும் பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சி நிர்வாகிகள் வந்து பேசினர். இது குறித்து ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் துரை.மதிவாணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த போராட்டத்திற்கு தமிழகஅரசு தான் காரணம். அரசு ஊழியர்களுக்கான சட்டம் எங்களை எதுவும் செய்யாது. தொழிற்சங்க ஒப்பந்த சட்டப்படி தான் ஊதிய உயர்வு ஒப்பந்தம் உள்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகிறது. தற்காலிகமாக அனுபவம் இல்லாத டிரைவர்களை தேர்வு செய்து பஸ்களை இயக்கி பொதுமக்களின் உயிருடன் விளையாட வேண்டாம். ஆர்ப்பாட்டம் நடத்தினால் கைது செய்வோம் என்று போலீசார் மிரட்டியதால் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளோம். போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, வேலைக்கு வர சொல்லுங்கள். இல்லையென்றால் பணி நீக்கம் செய்துவிடுவோம் என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் மிரட்டுவதை கண்டிக்கிறோம். எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழகஅரசும், கோர்ட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். கூடுதல் பஸ்களை இயக்குவதாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story