பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Jan 2018 4:15 AM IST (Updated: 7 Jan 2018 2:32 AM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி நாகையில் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் நேற்று நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, லீலாவதி, அன்பழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சரவணன் வரவேற்றார். தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில மகளிர் அணி அமைப்பாளர் மதனா எழிலரசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

உச்சவரம்பின்றி ஒருமாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.

காலமுறை ஊதியம்

தமிழக அரசின் சிறப்பு முறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கிராம உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் எந்தவித நிபந்தனையுமின்றி ரத்து செய்ய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர் சங்க பொதுச்செயலாளர் அந்துவன்சேரல், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க மாநில செயலாளர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ராணி நன்றி கூறினார். 

Next Story