ரூ.60 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது 2 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே ரூ.60 லட்சம் புகையிலை பொருட்கள் சிக்கியது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
கர்நாடகாவில் இருந்து கும்மிடிப்பூண்டி வழியாக லாரி மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் கடத்த இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து நேற்று காலை கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டைக்கும், தச்சூருக் கும் இடையே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான லாரி ஒன்றை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். மேற்கண்ட லாரியின் பக்கவாட்டில் பழங்கள் வைக்கும் பிளாஸ்டிக் பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனையடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூட்டைகளாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
ரூ.60 லட்சம்
போலீசாரின் முழுமையான சோதனையில் லாரியில் மொத்தம் ரூ.60 லட்சம் மதிப்புள்ள 230 மூட்டை புகையிலை பொருட்கள் வைத்திருப்பது தெரியவந்தது. லாரியுடன் புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மேற்கண்ட லாரி செங்குன்றம் அடுத்த சோழவரத்தில் உள்ள சுங்கசாவடி அருகே வந்து நின்ற பிறகு அங்கிருந்து சிலரது வழிகாட்டுதலோடு சென்னைக்கு எடுத்து செல்லப்படும் என்றும், எந்த பகுதிக்கு அவை கொண்டு செல்லப்படுகிறது என்பது தங்களுக்கு தெரியாது என்றும் விசாரணையின்போது லாரி டிரைவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை லாரியில் கடத்தி வந்த அதன் உரிமையாளரும், டிரைவருமான ஆந்திர மாநிலம் அனந்தபூரை சேர்ந்த காசிம் (வயது 33) மற்றும் கிளனர் நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
2 தனிப்படைகள்
மேலும் மேற்கண்ட லாரி சென்னையில் எந்த பகுதிக்கு செல்கிறது? அங்கிருந்து எந்த பகுதிகளுக்கு அவை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது? இதன் பின்னணியில் உள்ள கும்பல் யார்? என்பது குறித்து 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story