காஞ்சீபுரம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் சாவு ஒருவர் கைது


காஞ்சீபுரம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் சாவு ஒருவர் கைது
x
தினத்தந்தி 7 Jan 2018 3:08 AM IST (Updated: 7 Jan 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே மின்வேலியில் சிக்கி வாலிபர் பலியானார். இது தொடர்பாக மின்வேலி அமைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரத்தை அடுத்த திருப்புட்குழி புதியகாலனியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை செய்து வந்தார். காஞ்சீபுரத்தை அடுத்த மேலஒட்டிவாக்கத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி, மகன், மகளை பார்த்து விட்டு நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டுக்கு வந்தார். திருப்புட்குழி பகுதியில் ராமு என்ற ராமகிருஷ்ணன் (55) என்பவரது நிலத்தின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அந்த நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை பாதுகாப்பதற்காக மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது. மின்வேலியை கவனிக்காத பரமசிவம் அதில் சிக்கி படுகாயம் அடைந்தார்.

சாவு

இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அவரை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பாலுச்செட்டிச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர், தனிபிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மின்வேலி அமைத்திருந்த ராமுவை கைது செய்தனர். 

Next Story