இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி


இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி
x
தினத்தந்தி 7 Jan 2018 4:00 AM IST (Updated: 7 Jan 2018 3:10 AM IST)
t-max-icont-min-icon

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலியானார்கள்.

வண்டலூர்,

விழுப்புரம் மாவட்டம் கண்டமானடி பகுதியை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 67), இவர் கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரத்தில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் தைலாவரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே சாலையை கடக்கும் போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் கண் இமைக்கும் நேரத்தில் கதிர்வேல் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கதிர்வேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தை அடுத்த வெங்கட்ராயன்பேட்டை ரோடு தெருவை சேர்ந்தவர் அருள் பாண்டியன் (வயது 22). அம்மிக்கல், உரல் போன்றவற்றை செய்யும் தொழிலாளி. இவரது மனைவி பவானி(18). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. பவானி தற்போது 2 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

அருள் பாண்டியன் விற்பனை செய்வதற்கான அம்மிக்கல்லை மொபட்டில் வைத்து ஓட்டிக்கொண்டு வெம்பாக்கத்தில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி சென்றார். ஊவேரிசத்திரம் என்ற இடத்தில் செல்லும்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் அருள்பாண்டியனின் மொபட் மீது மோதியது.

சாவு

இதில் படுகாயம் அடைந்த அருள் பாண்டியனை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Next Story