நெல்லிக்குப்பம் அருகே தற்காலிக டிரைவர் மூலம் இயக்கப்பட்ட அரசு பஸ் வயலில் பாய்ந்தது 2 பெண்கள் காயம்
நெல்லிக்குப்பம் அருகே தற்காலிக டிரைவர் மூலம் இயக்கப்பட்ட அரசு பஸ் வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 2 பெண்கள் காயமடைந்தனர்.
நெல்லிக்குப்பம்,
ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் கடந்த 4-ந் தேதி மாலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் நேற்றும் நீடித்தது.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் மாற்று டிரைவர்கள் மூலம் பஸ்களை இயக்க ஏற்பாடுகள் நேற்று நடைபெற்றது. இதில் ஒரு சில அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அவ்வாறு தற்காலிக டிரைவர் மூலம் இயக்கப்பட்ட அரசு பஸ் ஒன்று வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் விவரம் வருமாறு:-
கீழ்அருங்குணம்
பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அந்த பஸ்சை தற்காலிக டிரைவரான கீழ்இருப்பை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 26) என்பவர் ஓட்டிச் சென்றார்.
நெல்லிக்குப்பம் அருகே கீழ்அருங்குணம் என்ற இடத்தில் வந்த போது, அந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட தொடங்கியது. இதில் பயந்து போன பயணிகள் அலறினர்.
இந்த நிலையில், அந்த பஸ் சாலையோரமாக இருந்த வயலில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் கீழ்அருங்குணத்தை சேர்ந்த அஞ்சலை (55), பூங்கொடி (45) ஆகிய 2 பெண்கள் காயமடைந்தனர். மற்றவர்கள் காயமின்றி தப்பினர்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த 2 பேரையும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சை, கிரேன் மூலம் மீட்டு பண்ருட்டி பணிமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story