மாநில வளர்ச்சிக்காக அரசுடன் இணைந்து பணியாற்றுவேன் கவர்னர் கிரண்பெடி பேட்டி
புதுவை மாநில வளர்ச்சிக்காக அரசுடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் வழுதாவூர் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள கனகன் ஏரிக்கு சென்றார். அங்கு தூய்மை பணியை தொடங்கி வைத்தார். வனத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து கனகன் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அடுத்த வாரம் ஆய்வு பணியின் போது இங்கு வந்து பார்வையிடுவேன் என்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி நேற்று காலை கவர்னர் கிரண்பெடி கனகன் ஏரிக்கு சென்றார். இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது அவருடன் என்.எஸ்.எஸ். மாணவர்களும், தன்னார்வல தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் சென்றனர்.
துப்புரவு பணி
அங்கு நடைபெற்று வரும் தூய்மைப்படுத்தும் பணியை ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் ஏரியில் உள்ள ஆகாய தாமரையை அகற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவுகள் ஏரியில் கலக்காமல் தடுக்கப்பட்டு புதிதாக பைப் லைன் அமைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொதுகால்வாயில் வரும் கழிவுநீர் கனகன் ஏரியில் கலக்காமல் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை கேட்டறிந்த கவர்னர் கிரண்பெடி அந்த பணிகளை விரைவாக முடித்து அடுத்த மாதம்(பிப்ரவரி) 3-ந் தேதி கனகன் ஏரியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும். திறந்தவெளி கழிப்பிடமாக இந்த பகுதியை அனுமதிக்கக்கூடாது, இந்த பகுதியில் சமுதாய கழிப்பிடம் ஒன்று கட்டிக்கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டார். அந்த பகுதியில் மரக்கன்றுகள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினரை கேட்டுக்கொண்டார்.
அரசுடன் இணைந்து பணியாற்றுவேன்
பின்னர் நிருபர்களுக்கு கவர்னர் கிரண்பெடி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
அரசியல் அமைப்பு சட்டப்படி கவர்னர் மாளிகைக்கு அதிகாரம் உள்ளது என்பதை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் உணர்ந்துள்ளனர். அதற்கு மதிப்பு அளித்து அரசியல் அமைப்பு சட்ட விதிகளின்படி மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளிப்பேன். புதுவை மாநில வளர்ச்சிக்காக அரசுடன் இணைந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.
Related Tags :
Next Story