அறுவடை வகுப்பு


அறுவடை வகுப்பு
x
தினத்தந்தி 7 Jan 2018 1:30 PM IST (Updated: 7 Jan 2018 11:21 AM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வு பெருகிக் கொண்டிருக்கிறது. தொண்டு நிறுவனங்களும், சமூக அமைப்புகளும் பள்ளி-மாணவ மாணவிகளுடன் கைகோர்த்து மரம் வளர்ப்பு, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றன.

 இயற்கையின் முக்கியத் துவத்தை மாணவ-மாணவிகள் அறிந்து கொள்வதற்காக பாடத்திட்டங்களிலும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

மகாராஷ்டிராவில் இயங்கும் ‘கிரீன் யாத்ரா’ எனும் அமைப்பு மாணவர்களை முன்னிலைப்படுத்தி மரக்கன்று நடும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதற்காக ‘கோ கிரீன் கிட்ஸ்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. கிராமப்புற, நகர்ப்புற பகுதிகளில் இயங்கும் பள்ளி களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வினியோகம் செய்கிறது. அதனை நடவு செய்யும் பணியில் ஈடுபடும் மாணவர்கள் பின்னர் அவைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள் கிறார்கள். மாணவர்களை குழுக்களாக பிரித்து சுழற்சி முறையில் பராமரிப்பு பணியில் ஈடுபடுத்துகிறார்கள்.

அந்த அமைப்பின் நிறுவனர் பிரதீப் திரிபாதி, ‘‘மாணவர்களின் பங்களிப்பை அதிகப்படுத்துவது மரம் நடும் பணியின் ஒரு அங்கமாகும். அவர்கள் ஆர்வமாக மரக் கன்றுகளை பராமரிக்கிறார்கள். நாங்களும் அடிக்கடி சென்று பார்வையிடுகிறோம். மற்ற இடங்களோடு ஒப்பிட்டால் மாணவர்களின் பராமரிப்பில் 95 சதவீத மரங்கள் நன்றாக வளர்கின்றன. அதனால் அவர்களின் பெற்றோர்களிடமும் மரம் வளர்ப்பின் அவசியத்தை விளக்குமாறு அறிவுறுத்து கிறோம்’’ என்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தார் பாலைவனத்தின் ஒரு பகுதியில் அமைந் திருக்கும் பார்மர் நகரில் இயங்கும் பள்ளி ஒன்றில் மரம் வளர்ப்பு பாடத்திட்டமாகவே இடம் பிடித்திருக்கிறது. மரக்கன்று நடுவது மட்டுமின்றி சமையலறை தோட்டங்கள், மழைநீர் சேகரிப்பு, ஒளி சேர்க்கை உள்ளிட்ட சுற்றுச்சூழலை பற்றி விரிவாக மாணவர்கள் அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கிறார்கள். ‘சங்கல்ப் தரு’ என்ற அமைப்பின் மூலம் பாடத்திட்டத்தை உருவாக்குகிறார்கள். அதன் ஒரு பகுதியாக 6 முதல் 8 மாதங்கள் வரை செய்முறை வகுப்புகள் மரக்கன்றுகள், காய்கறிகள் வளர்ப்பு, அறுவடை சார்ந்ததாக இருக்கின்றது.

‘‘பள்ளி பாடத்திட்டம் மாணவர்களை நாளைய சிறந்த குடிமகன்களாக உருவாக் கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீணாகும் கழிவு பொருட்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கும் கற்றுக்கொள்கிறார்கள். பள்ளிப்படிப்பின்போதே மரக்கன்றுகளை பராமரித்து கொள்வதால் சுற்றுச் சூழலை பற்றி அறிந்து கொள்ளவும் உதவும்" என்கிறார் இந்த அமைப்பின் தலைவர் அபூர்வா பண்டாரி. பெங்களூருவை மையமாக கொண்டு இயங்கும் ‘சே ட்ரீ’ எனும் அமைப்பு புறநகர் பகுதிகளில் இயங்கும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து மரக்கன்று நடும் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறது. இந்த அமைப்பு மரக்கன்றுகள் வேகமாக வளரும் வகையில் நடவு முறையில் நுட்பமான விஷயங்களை கையாளுகிறது. மாமரம், அரச மரம் உள்ளிட்ட உள்நாட்டு மரக்கன்றுகளை அதிக அளவில் நடவு செய்ய முனைப்பு காட்டுகிறது.

‘‘மாணவர்கள் சுற்றுச்சூழலுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்கள் அமைப்பின் தன்னார்வலர்கள் வாரந்தோறும் மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிப்பு பணிகளைமேற்கொள்கிறார்கள். ஓரிரு மாதங்களுக்குள் 10 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்’’ என்கிறார்கள்.

Next Story