சுப்பிரமணியசுவாமி உருவபொம்மையை எரிக்க முயற்சி
சுப்பிரமணிய சுவாமி பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம்,
மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் சந்தை திடல் பகுதியில் சுப்பிரமணிய சுவாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது மாநில விவசாய அணி செயலாளர் துரைதவமணி தலைமையில் மாவட்ட செயலாளர் ரகுமான், இளைஞர் அணி செயலாளர் கபில்தாஸ் பாண்டியன் உள்பட ஏராளமானோர் உருவபொம்மையை எரிக்க வந்தபோது போலீசார் தடுத்து பறிமுதல் செய்தனர்.
இதேபோல, சிக்கல் பஸ் நிலையம் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் மாவட்ட தலைவர் முனியசாமி, மாவட்ட பொருளாளர் தமிழ்முருகன் உள்ளிட்டோர் சுப்பிரமணிய சுவாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற போது போலீசார் பறிமுதல் செய்தனர்.