தொடரும் போராட்டம்: பணிக்கு வராத போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் நிலையில் பணிக்கு வராத ஊழியர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டன.
மதுரை,
ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கடந்த 4–ந் தேதி மாலை 6 மணி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தம் காரணமாக மதுரையில் நேற்று 20 சதவீத போக்குவரத்து கழக ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்தனர். எனவே மாற்று ஏற்பாடாக 245 டிரைவர்களும், 215 கண்டக்டர்களும் தினக்கூலி அடிப்படையில் நியமிக்கப்பட்டு அவர்கள் பணிக்கு வந்தனர். எனவே ஓட்டுமொத்தமாக 50 சதவீதத்திற்கு குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. சில பஸ்களில் டிரைவர்கள் இருந்தும் கண்டக்டர்கள் இல்லாததால் பஸ்கள் இயக்க முடியவில்லை.
பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து ஆரப்பாளையம் மற்றும் மாட்டுத்தாவணிக்கு மட்டும் பஸ்கள் தொடர்ச்சியாக இருந்தன. மற்ற முக்கிய பகுதிகளுக்கு எல்லாம் 1 மணி நேரத்திற்கு ஒரு பஸ் என்ற கணக்கில் இயக்கப்பட்டன. ஆரப்பாளையத்தில் இருந்து வெளியூர்களுக்கு தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, கோர்ட்டு உத்தரவுப்படி அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று எச்சரிக்கை நோட்டீசு அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்படுகிறது என்றார்.