4–வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பஸ்கள் ஓடாததால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது


4–வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பஸ்கள் ஓடாததால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
x
தினத்தந்தி 8 Jan 2018 4:00 AM IST (Updated: 8 Jan 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரியில் போக்குவரத்து தொழிலாளர்கள் 4–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் பயணிகள் அவதி அடைந்தனர்.

ஊட்டி,

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4–ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை கோட்டத்துக்கு உட்பட்ட நீலகிரி மண்டலத்தில் தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 4–வது நாளாக பணிக்கு வரவில்லை. இதனால் நீலகிரி மாவட்டத்தில் அரசு பஸ் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஊட்டி–1, ஊட்டி–2, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், மேட்டுப்பாளையம்–2 ஆகிய பணிமனைகள் என நீலகிரி மாவட்டத்தில் 266 பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு பஸ்களை தற்காலிக ஊழியர்கள் குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களுக்கு ஓட்டினர். போதிய பஸ்கள் ஓடாததால் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இருந்தாலும், ஊட்டி மத்திய பஸ் நிலையத்திலும், அதன் முன்பகுதியிலும் சுற்றுலா பயணிகள், வெளியூர்களுக்கு செல்பவர்கள் மற்றும் பயணிகள் உடைமைகளுடன் பஸ்சுக்காக காத்திருந்ததை காண முடிந்தது. சில கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படாததால், உரிய நேரத்துக்கு கிராமத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். இதனால் பயணிகள் ஜீப்கள் மூலம் தங்களது கிராமங்களுக்கு சென்றனர்.

ஒரு சில சுற்றுலா பயணிகள் ஆட்டோ, ஜீப்கள் மூலம் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். அரசு பஸ்கள் குறைவாக இயக்கப்பட்டதால், ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து விட்டது. அதன் காரணமாக சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. ஊட்டியில் தனியார் மினி பஸ்கள், கர்நாடக அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

ஊட்டி மத்திய பஸ் நிலையம், அதன் முன்பகுதி, பணிமனை முன்பகுதி ஆகிய இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பணிமனையில் இருந்து கிராமப்புறங்களுக்கு ஒவ்வொரு பஸ்சாக இயக்கப்பட்டதால், பணிமனை முன்பு பயணிகள் தங்களது ஊர்களுக்கு பஸ்கள் ஓடுகிறதா? என்ற ஏக்கத்தோடு காத்திருந்தனர்.

ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், அங்குள்ள சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும். தொழிலாளர்கள் அச்சமின்றி வேலைநிறுத்தத்தை தொடர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) ஊட்டி ஏ.டி.சி. திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சுற்றுலா தலங்கள் மட்டுமின்றி அதை ஓட்டி உள்ள வணிக வளாகங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. போதிய வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.

இது குறித்து வியாபாரி ஒருவர் கூறும் போது, பஸ்கள் ஓடாததால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வெகுவாக குறைந்து விட்டனர். ஓட்டல், நடைபாதை கடைகளிலும் போதிய வியாபாரம் இல்லை. எனவே அரசு விரைந்து போக்குவரத்து தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்த போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.


Next Story