4–வது நாளாக வேலைநிறுத்தம்: கோவை– பாலக்காடு இடையே கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்பட்ட அரசு பஸ்கள்


4–வது நாளாக வேலைநிறுத்தம்: கோவை– பாலக்காடு இடையே கண்டக்டர்கள் இல்லாமல் இயக்கப்பட்ட அரசு பஸ்கள்
x
தினத்தந்தி 8 Jan 2018 4:15 AM IST (Updated: 8 Jan 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 4–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கோவை –பாலக்காடு இடையே கண்டக்டர்கள் இல்லாமல் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

கோவை,

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று 4–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்திலும் நேற்று போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்தது.

கோவை மாவட்டத்தில் உள்ள 18 டெப்போக்களில் இருந்து தினமும் 1200 பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம் ஆனால் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று 200–க்கும் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. பஸ்களை இயக்குவதற்கு டிரைவர்கள் முன்வராததால் தற்காலிக டிரைவர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக நடத்தப்பட்ட தேர்வில் முதல் 2 நாட்கள் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் வரவில்லை.

ஆனால் நேற்று முன்தினம் கோவை மாவட்டம் முழுவதும் 300 டிரைவர்கள், 160 கண்டக்டர்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கோவை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை டவுன் பஸ்கள் ஒன்றிரண்டு தான் இயக்கப்பட்டன. ஆனால் தற்காலிக டிரைவர்களை கொண்டு நேற்று டவுன் பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட்டன. இதே போல வெளியூர் பஸ்களும் இயக்கப்பட்டன. நேற்று விடுமுறை தினம் என்பதால் மக்கள் கூட்டம் இல்லாததால் பஸ்களிலும் கூட்டம் காணப்படவில்லை.

டவுன் பஸ்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படாததால் ஒரு வழித்தடத்தில் சென்று வந்த பஸ்சை பஸ் நிலையத்தில் உள்ள கூட்டத்தின் நிலவரத்தை பார்த்து அதற்கேற்ப மற்றொரு வழித்தடத்தில் போக்குவரத்து அதிகாரிகள் மாற்றி விட்டனர். இதனால் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் பஸ் நிலையங் களில் போக்குவரத்து அதிகாரிகள் முகாமிட்டு உள்ளனர். தனியார் பஸ்கள் முழு அளவில் இயக்கப்பட்டதால் அதில் பயணிகள் ஏறி சென்றனர்.

தற்காலிக டிரைவர்கள் பஸ்களை இயக்கியதால் அவர்கள் 2 அல்லது 3 முறை (சிங்கிள்) பயணிகளை ஏற்றிச் சென்று விட்டு விட்டு மீண்டும் டெப்போவுக்கு பஸ்சை கொண்டு வந்தனர். ஆனால் அவர்க ளிடம் அதிகாரிகள் 8 மணி நேரம் இயக்க வேண்டும் என்று கூறி திருப்பி அனுப்பினார்கள். இதனால் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் தற்காலிக டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் சமரசம் ஏற்பட்டு தற்காலிக டிரைவர்கள் மீண்டும் பஸ்சை ஓட்டிச் சென்றனர்.

கோவை–பாலக்காடு இடையே ஒன்றிரண்டு பஸ்கள் தான் நேற்று இயக்கப்பட்டன. அவற்றை ஒட்டு வதற்கு டிரைவர்கள் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் கண்டக்டர்கள் இல்லை. இதனால் உக்கடம் பஸ் நிலையத்தில் ஒரு கண்டக்டரை நியமித்து அவர் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து பஸ்சில் ஏற்றி விட்ட பின்னர் அந்த பஸ்சின் கதவை மூடி அனுப்பி விட்டனர். அந்த பஸ் கோவையை விட்டால் வழியில் எங்கும் நிற்காது.

அந்த பஸ் பாலக்காடு சென்று பயணிகளை இறங்கி விட்ட பிறகு அங்குள்ள ஒரு கண்டக்டர் கோவைக்கு செல்லும் பயணிகளை மட்டும் அந்த பஸ்சில் ஏற்றி டிக்கெட் கொடுத்து கதவை மூடி விடுவார். அந்த பஸ் வழியில் வேறு எங்கும் நிற்காது, இப்படி கோவை–பாலக்காடு இடையே நேற்று கண்டக் டர்கள் இல்லாமல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் கோவை–பாலக்காடு இடையே உள்ள ஊர்களுக்கு செல்லமுடியாமல் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.

வேலைநிறுத்தம் குறித்து கோவை போக்குவரத்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

கோவை மாவட்டத்தில் நேற்று 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களை கொண்டு நேற்று கூடுதல் பஸ்கள் இயக்கப் பட்டன. நிலைமைக்கு ஏற்ப எந்த வழித்தடத்தில் கூட்டம் இருக்கிறதோ அந்த வழித்தடத்தில் பஸ்களை திருப்பி விட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலைக்குள் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். நாளை(இன்று) வேலை நாள் என்பதால் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவை மண்டல போக்குவரத்து தொழிலாளர் சங்க தொ.மு..ச பேரவை தலைவர் பெரியசாமி கூறியதாவது:–

தலைமை போக்குவரத்து தொழிற்சங்கத்தின் உத்தரவின்படி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் குடும்பத்துடன் இன்று(திங்கட்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதன்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story