திருச்சி பணிமனையில் பழுது நீக்கப்பட்ட மலைரெயில் என்ஜின் தண்டவாளத்தில் இறக்கி வைக்கப்பட்டது
திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் பழுது நீக்கம் செய்யப்பட்ட மலைரெயில் என்ஜின் மேட்டுப்பாளையம் கொண்டு வரப்பட்டு தண்டவாளத்தில் இறக்கி வைக்கப்பட்டது.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மலைரெயிலில், மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி என்ஜினும், அங்கிருந்து ஊட்டிக்கு டீசல் என்ஜினும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலை ரெயில் என்ஜின் மற்றும் பெட்டிகள் பழுது பார்க்கும் பணிக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு அனுப்பப்பட்டு பழுது நீக்கம் செய் யப்பட்ட மலைரெயிலின் டீசல் எஞ்சின் கடந்த 4 நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதேபோல பழுது நீக்கம் செய்யும் பணிக்காக திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்க மற்றொரு டீசல் என்ஜின் மற்றும் 3 பெட்டிகள் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு கொண்டு வரப்பட்டன.
இந்த நிலையில் பழுது நீக்கம் செய்யப்பட்ட டீசல் என்ஜினை ஊட்டி மலைரெயில் தண்டவாளத்தில் இறக்கி வைக்கும் பணி நேற்று நடந்தது. இதற்காக ஈரோட்டில் இருந்து 140 டன் எடை கொண்ட ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு இருந்தது.
கோவை உதவி கோட்ட பொறியாளர் தீஷா சவுத்ரி, பொறியாளர் கே.செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு உதவி கோட்ட பொறியாளர் கணேசன் தலைமையில் நேற்று மதியம் 1 மணிக்கு 20–க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்களின் உதவியுடன் பழுது நீக்கம் செய்யப்பட்ட மலைரெயில் என்ஜின் ராட்சத கிரேன் மூலம் ஊட்டி மலைரெயில் தண்டவாளத்தில் பத்திரமாக இறக்கி வைக்கப்பட்டது.
இதையடுத்து பழுதான மற்றொரு டீசல் என்ஜின் மற்றும் 3 பெட்டிகள் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.