தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்


தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 8 Jan 2018 4:15 AM IST (Updated: 8 Jan 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களுக்கு 4-ம் நிலைக்கு இணையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும் என்று மாநில பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் புதிய பஸ்நிலையம் எதிரே உள்ள அஸ்வின்ஸ் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் காண்டீபன் தலைமை தாங்கினார். மாநில இணை பொதுச்செயலாளர் பாலசுந்தரம் வரவேற்றார். மாவட்ட செயலாளர் பிச்சை, தலைவர் சேகர், பொருளாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர் குமரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் தீர்மானங்களை விளக்கி பேசினார். மாநில பொருளாளர் பெரியசாமி சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் மாநிலம் முழுவதும் கிராமங்களில் 20 ஆண்டுகாலமாக பணிபுரிந்த அனைத்து தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களுக்கும் டி பிரிவிற்கு இணையான வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்கள் ஆகவும், கிராம நிர்வாக அலுவலர்களாகவும் பதவி உயர்வு வழங்குவதற்கு 10 ஆண்டுகள் பணிமூப்பு என்பதை 6 ஆண்டுகள் ஆக குறைக்க வேண்டும். பதவி உயர்வுக்கு 10 சதவீதம், 20 சதவீதம் என்பதை 40 சதவீதம் உயர்த்தி வழங்கிடவேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பணியில் இருந்து ஓய்வுபெறும் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக உயர்த்தி வழங்க வேண்டும். பொங்கல் பரிசு தொகையை ஊதிய சதவிகித அடிப்படையில் நாள் கணக்கில் கணக்கிட்டு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே சீரான அடிப்படை ஊதியம் வழங்கவேண்டும். அவசர காலங்களில் ரெயில் பாதை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் கிராம உதவியாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஒருநாள் சிறப்பு ஊதியம் ரூ.6 என்பதை மாற்றி தற்போது வழங்கும் ஊதியத்தில் ஒருநாள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தலைமை நிலைய செயலாளர் மணி நன்றி கூறினார்.


Next Story