கடமலை–மயிலை ஒன்றியத்தில் மலைக்கிராமங்களுக்கு இயக்கப்படாத பஸ்கள் பொதுமக்கள் அவதி


கடமலை–மயிலை ஒன்றியத்தில் மலைக்கிராமங்களுக்கு இயக்கப்படாத பஸ்கள் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 8 Jan 2018 3:45 AM IST (Updated: 8 Jan 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

கடமலை–மயிலை ஒன்றியத்தில் மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடமலைக்குண்டு,

மலைக்கிராமங்கள் தமிழகம் முழுவதும் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்திலும் போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் நேற்று 4–வது நாளாக குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் தேனி புதிய பஸ்நிலையத்தில் இருந்து குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன.

கடமலை–மயிலை ஒன்றியத்தில் 150–க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. நாள்தோறும் தேனியில் இருந்து கடமலைக்குண்டு வழியாக வருசநாடு, முத்தாலம்பாறை, கோம்பைத்தொழு, வெள்ளிமலை உள்ளிட்ட கிராமங்களுக்கு 50–க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தனியார் பஸ்கள் வருசநாடு கிராமத்திற்கு மட்டுமே இயக்கப்படுகிறது. வெள்ளிமலை, கோம்பைத்தொழு உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு குறைந்த அளவிலான அரசு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. கடமலை–மயிலை ஒன்றியத்தில் கடமலைக்குண்டு கிராமத்தில் அதிக அளவில் கடைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன.

இதனால் மற்ற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பல்வேறு தேவைகளுக்கு கடமலைக்குண்டு கிராமத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக வெள்ளிமலை, கோம்பைத்தொழு, முத்தலாம்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

தனியார் பஸ்கள் வழக்கம் போல இயங்கி வருகிறது. ஆனால் தனியார் பஸ் அனைத்தும் வருசநாடு கிராமம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மற்ற மலைக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூடுதல் கட்டணம் செலுத்தி ஆட்டோ, வேன்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

கடமலைக்குண்டு வழியாக சில அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தாலும் மலைக்கிராமங்களுக்கு இயக்கப்படவில்லை. ஏற்கனவே தனியார் பஸ்கள் அதிகம் செல்லும் வருசநாடு கிராமத்திற்கே அரசு பஸ்களும் இயக்கப்படுகிறது. மலைக்கிராமங்களுக்கு 3 நாட்களுக்கு மேலாக பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது. முத்தாலம்பாறை, கோம்பைத்தொழு உள்ளிட்ட மலை கிராம மக்கள் பஸ்சிற்கு பதிலாக ஆட்டோ, வேன் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்துள்ளது. எனவே வனப்பகுதி வழியாக ஆட்டோ, வேன் உள்ளிட்டவை இயக்க முடியாது. இதனால் இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் காமன்கல்லூர், குமணன்தொழு, கடமலைக்குண்டு உள்ளிட்ட பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

தற்போது பஸ்கள் இயக்கப்படாததால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் கூடுதலாக தனியார் பஸ்கள் வருசநாடு கிராமத்துக்கு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

எனவே தற்காலிக பணியாளர்கள் மூலம் வருசநாடு கிராமத்துக்கு அரசு பஸ்கள் இயக்குவதற்கு பதிலாக ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கோம்பைத்தொழு, வெள்ளிமலை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு பஸ்களை இயக்கினால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story