கம்பத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்


கம்பத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 Jan 2018 3:00 AM IST (Updated: 8 Jan 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யக்கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்பம்,

கம்பம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இங்கு பொதுமக்களுக்கு முல்லைப்பெரியாற்றில் உள்ள உறை கிணறுகள் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதே போல் லோயர்கேம்ப்பில் உள்ள நீரேற்று நிலையத்தில் இருந்தும் கம்பம் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இவையில்லாமல் நகராட்சி பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் கம்பம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை குடிநீர் தொட்டியில் சேகரித்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத அளவுக்கு மின்சார இணைப்பை நகராட்சி அதிகாரி துண்டித்து விட்டு சென்றார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 20 நாட்களாக தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் தண்ணீர் வினியோகம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story