அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு- 4 பேர் கைது


அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு- 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 Jan 2018 3:45 AM IST (Updated: 8 Jan 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

நச்சலூர், புன்னம்சத்திரத்தில் அரசு பஸ்கள் கண்ணாடியை உடைத்ததாக4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நொய்யல்,

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 32). அரசு பஸ் டிரைவரான இவர் நேற்று கொடுமுடியில் இருந்து கரூர் நோக்கி அரசு பஸ்சை ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள திருக்காடுதுறையை சேர்ந்தபிரபு என்பவர் கண்டக்டராக பணியாற்றினார். இந்த நிலையில் அரசு பஸ் கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது புன்னம்சத்திரம் அருகே உள்ள ஓலப்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி, காட்டூரை சேர்ந்த மதன்குமார் ஆகியோர் பஸ்சை வழிமறித்து டிரைவர், கண்டக்டரிடம் பஸ்சை இயக்க கூடாது என்று கூறி தகராறு செய்தனர். மேலும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து பிரகாஷ் கொடுமுடி பணிமனை மேலாளர் கிருஷ்ணமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தார். பின்னர் இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரமூர்த்தி, மதன்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், கரூர் பணிமனையில் ஈஸ்வரமூர்த்தி அரசு பஸ் டிரைவராகவும், மதன்குமார் கண்டக்டராகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது தெரிய வந்தது.

இதேபோல் குளித்தலையில் இருந்து நச்சலூருக்கு டவுன் பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. பஸ்சை தற்காலிக டிரைவரான குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளியை சேர்ந்த ராஜசேகரன்(32) என்பவர் ஓட்டுனார். பஸ் நங்கவரம் வாரிக்கரை பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ் பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து திடீரென கையில் வைத்திருந்த கற்களை கொண்டு பஸ்சின் பின் பகுதியில் உள்ள கண்ணாடியில் எறிந்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். இதில் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து ராஜசேகரன் குளித்தலை பணிமனை அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பஸ்சை குளித்தலை பணிமனைக்கு ஓட்டி வரும்படி அதிகாரி உத்தரவிட்டார். இது குறித்து குளித்தலை போலீஸ் நிலையத்தில் ராஜசேகரன் புகார் செய்தார்.

புகாரின் பேரில் குளித்தலை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில்,பஸ் மீது கல்வீசிய நங்கவரம் பேரூராட்சி மாடுவிழுந்தான் பாறையை சேர்ந்த ரெங்கராஜ்(46). குளித்தலை பணிமனையில் அரசு பஸ் டிரைவராக பணி புரிந்து வருவதும். நங்கவரம் தெற்குப்பட்டியை சேர்ந்த முருகேசன்(42) திருச்சி பணிமனையில் அரசு பஸ் கண்டக்டராக பணியாற்றி வருவதும். இவர்கள் இருவரும் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் என்றும், வேலை நிறுத்த போராட்டத்தில் பணிக்கு செல்லாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். 

Next Story