அரசாணையை செயல்படுத்தாத அதிகாரிகளை கண்டித்து 13 தாலுகா அலுவலகங்கள் முன்பு இன்று தர்ணா போராட்டம்
அரசாணையை செயல்படுத்தாத அதிகாரிகளை கண்டித்து 13 தாலுகா அலுவலகங்கள் முன்பு இன்று தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விழுப்புரம்,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பெரியாப்பிள்ளை தலைமை தாங்கினார். இணை செயலாளர் பொன்.கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் மாநில செயலாளர் பரமானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு சங்க வளர்ச்சி குறித்து பேசினார்கள்.
கூட்டத்தில், மாவட்ட மாறுதலுக்கான உத்தரவு வழங்க வேண்டும், உட்பிரிவு பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரையை ஏற்க வேண்டும், கூடுதல் கிராமங்களுக்கு பொறுப்பு வகிக்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொறுப்பூதியம் வழங்க வேண்டும், இணையதள சான்றிதழ் வழங்குவதற்கு ஆகும் செலவின தொகையை உடனே வழங்க வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்த கோரிக்கைகளுக்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டபோதிலும் அதனை அரசு அதிகாரிகள் செயல்படுத்தாமல் இருப்பதை கண்டித்தும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகா அலுவலகங்களிலும் இன்று(திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு நேர தர்ணா போராட்டம், 10–ந் தேதி(புதன்கிழமை) விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம், 18–ந் தேதி முதல் தொடர் விடுப்பு போராட்டம் ஆகியவற்றை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட துணைத்தலைவர் பெரியதமிழன், பொருளாளர் சிவக்குமார், அமைப்பு செயலாளர் இந்திரகுமார் உள்பட 13 வட்ட பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். முடிவில் விக்கிரவாண்டி வட்ட தலைவர் மணிபாலன் நன்றி கூறினார்.