நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 6,500 போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 6 ஆயிரத்து 500 போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது
நெல்லை,
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 6 ஆயிரத்து 500 போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என்று அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல நிர்வாக இயக்குனர் மணி தெரிவித்தார்.
வேலைநிறுத்தம்ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4–ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று 4–வது நாளாக போராட்டம் நீடித்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக நேற்று குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நேற்று முதல் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல நிர்வாக இயக்குனர் மணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
6,500 பேருக்கு நோட்டீஸ்அரசு போக்குவரத்து கழக நெல்லை மண்டல கட்டுப்பாட்டின் கீழ் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் சுமார் 1,700–க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன. ஆனாலும் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் பஸ்களை இயக்கி வருகிறோம். பொதுமக்களுக்கு எந்தவிதமான சிரமம் இன்றி பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
போக்குவரத்து தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தை கைவிட்டு வேலைக்கு திரும்புமாறு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. ஆனாலும் கோர்ட்டு உத்தரவையும் தொழிலாளர்கள் மதிக்காமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வாறு கோர்ட்டு உத்தரவை மீறி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சுமார் 6 ஆயிரத்து 500 தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நோட்டீஸ் வழங்கும் பணி இன்று (நேற்று) முதல் தொடங்கப்பட்டு உள்ளது. விரைவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.