எரியோடு ரெயில் நிலையத்தில் 3–வது ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரம்
எரியோடு ரெயில் நிலையத்தில் 3–வது ரெயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வேடசந்தூர்,
வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு ரெயில் நிலையம் வழியாக திண்டுக்கல்–கரூர் அகல ரெயில்பாதை செல்கிறது. இந்த வழியாக மும்பை, சென்னை, மைசூரு பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு 20–க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த ரெயில் நிலையத்தில் கோவை–நாகர்கோவில், ஈரோடு–திருநெல்வேலி மற்றும் திருநெல்வேலி–ஈரோடு, நாகர்கோவில்–கோவை ஆகிய 4 பாசஞ்சர் ரெயில்கள் மட்டும் நின்று செல்கின்றன.
வேடசந்தூர், எரியோடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் மதுரை, திண்டுக்கல், கரூர், கோவை, ஈரோடு, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரெயில் மூலம் செல்லவே விரும்புகின்றனர். மேலும் குறைந்த கட்டணம் என்பதால் ரெயிலில் செல்ல பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரெயில் நிலையம், எரியோட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஆனால் ரெயில்நிலையம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. ரெயில் நிலையத்துக்கு செல்வதற்குள் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ரெயில் நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. இதனால் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவலநிலை ஏற்படுகிறது. குறிப்பாக பெண்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இங்கு 2 ரெயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஒரு ரெயில் வந்து நிற்கும் போது மற்றொரு ரெயில் வந்து நின்றால் அதில் இருந்து பயணிகள் இறங்கி ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. எனவே 3–வது ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து 3–வது ரெயில்பாதை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றது. ஏற்கனவே அங்கு நடைமேடை கட்டப்பட்டுள்ளதால் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்தவுடன் பொதுமக்கள் ரெயிலில் இருந்து இறங்கி செல்ல வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் எரியோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் முன்பதிவு செய்யும் வசதியும், அனைத்து ரெயில்களும் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.