4–வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் நீடிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் ஓடின
தமிழகம் முழுவதும் நேற்று 4–வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 60 சதவீத அரசு பஸ்கள் ஓடின.
திண்டுக்கல்,
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதனை தொழிற்சங்கத்தினர் ஏற்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த போராட்டம் நேற்றும் 4–வது நாளாக நீடித்தது.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை காலையில் குறைவான எண்ணிக்கையில் தான் பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் பெரும்பாலானோர் நேற்றும் பணிக்கு வராததால் பணிமனைகளிலேயே பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து அண்ணா தொழிற்சங்கத்தினர் பணிக்கு வரத்தொடங்கினர்.
பின்னர் தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை வைத்தும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஏற்கனவே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போது அரசு பஸ்களை ஓட்டிய தனியார் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களை வைத்தும் பஸ்கள் இயக்கப்பட்டன. இதேபோல் நத்தம், பழனி, வத்தலக்குண்டு, நிலக்கோட்டை உள்பட மாவட்டத்தின் பல இடங்களில் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் அதிக அளவில் தனியார் பஸ்களும் இயக்கப்பட்டன. நேற்று விடுமுறை தினம் என்பதால் மாணவ, மாணவிகள் யாரும் பள்ளி–கல்லூரிகளுக்கு செல்லவில்லை. மேலும் தனியார், அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்களும் விடுமுறையையொட்டி பணிக்கு செல்லவில்லை.
இதனால் திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையம் பயணிகள் கூட்டம் இன்றி காணப்பட்டது. இதையடுத்து பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பஸ்கள் இயக்கப்பட்டன. எனவே பயணிகள் சிரமமின்றி பயணம் செய்தனர்.