கடனை அடைக்க வரதட்சணை கேட்டு இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை கணவன், மாமியார் கைது


கடனை அடைக்க வரதட்சணை கேட்டு இளம்பெண் கழுத்தை இறுக்கி கொலை கணவன், மாமியார் கைது
x
தினத்தந்தி 8 Jan 2018 3:45 AM IST (Updated: 8 Jan 2018 1:43 AM IST)
t-max-icont-min-icon

தண்டராம்பட்டு அருகே கடனை அடைப்பதற்கு வரதட்சணை கேட்டு, இளம்பெண்கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கணவன், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.

தண்டராம்பட்டு,

தண்டராம்பட்டு அருகில் உள்ள விஜயப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் வினோத் (வயது 20). இவருக்கும், விழுப்புரம் மாவட்டம் கெடார் கிராமத்தை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகள் சவுந்தர்யா (19) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு யோகித் என்ற மகன் உள்ளான். வினோத் சரக்கு ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார்.

வினோத், தனக்கு தெரிந்த நபர்களிடம் ரூ.4 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார். கடனை திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து சவுந்தர்யாவிடம் பணம் கேட்டுள்ளனர். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சவுந்தர்யா ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக, சவுந்தர்யாவின் தம்பி அய்யனாருக்கு உறவினர்கள் போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

அய்யனார் விஜயப்பனூருக்கு வந்து விசாரித்தபோது கடனை அடைக்க வரதட்சணையாக பணம் கேட்டு சவுந்தர்யாவை அவரது கணவன் வினோத்தும், மாமியார் அஞ்சலை (40) ஆகியோர் கொடுமைப்படுத்தியதும், சம்பவத்தன்று சவுந்தர்யாவை கழுத்தை இறக்கி கொல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அய்யனார் தண்டராம்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத், அஞ்சலை ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சவுந்தர்யா நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து கொலை முயற்சி பிரிவில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அதனை கொலை வழக்காக மாற்றி தொடர்ந்து சவுந்தர்யாவின் கணவன், மாமியார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story