கதிர் முற்றிய பிறகும் நெல்மணிகள் விளையாததால் விவசாயிகள் அதிர்ச்சி நஷ்டஈடு வழங்க கோரிக்கை


கதிர் முற்றிய பிறகும் நெல்மணிகள் விளையாததால் விவசாயிகள் அதிர்ச்சி நஷ்டஈடு வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 8 Jan 2018 4:15 AM IST (Updated: 8 Jan 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே வேளாண்மைத்துறையில் வாங்கிய நெல் விதைகளை பயிரிட்ட விவசாயிகள் கதிர்கள் முற்றிய பிறகும் நெல்மணிகள் விளையாததால் அதிர்ச்சி அடைந்தனர். நஷ்டஈடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ளது களர்பதி ஊராட்சி. இங்குள்ள களர்பதி, மலையாண்டஹள்ளி கிராமத்தில் பொதுமக்கள் பலர் விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்கள் மத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விதை நெல்களை வாங்கி பயிரிடுவது வழக்கம்.

இந்த நிலையில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஏ.டி.டி.49 என்ற நெல் ரகத்தை பயிரிடுமாறு அதிகாரிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்கள். இதையடுத்து ஏராளமான விவசாயிகள் ஏ.டி.டி. 49 ரக நெல் ரகத்தை வாங்கி சென்று பயிரிட்டார்கள்.

4 மாத காலத்தில் அறுவடைக்கு வரும் ஏ.டி.டி. 49 ரக நெல், 3 மாதங்கள் வரையில் நன்றாகவும், நோய் தாக்குதல் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் வளர்ந்து வந்தது. இந்த நிலையில் நெல் மணிகள் முற்றி வரும் பருவத்தில் திடீரென்று சருகுகள் போல பயிர்கள் பல ஏக்கர் நிலங்களில் குவியல், குவியலாக வாடுவதும், நெல்மணிகளே விளையாமல் இருப்பதையும் கண்டு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

களர்பதியை சேர்ந்த விவசாயி பிரகாசம் (வயது 43), மாதையன் (31), ராமதாஸ் (50), காத்தவராயன் (55) ஆகியோரின் நிலங்களில் பயிரிட்டிருந்த நெல் பயிர்கள் 4 மாதங்களுக்கு பிறகும் வெறும் புற்களாக காய்ந்து இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். களர்பதியில் வேளாண்மைத்துறை மூலமாக விதை நெல்கள் வாங்கி பயிரிட்டவர்களில் சுமார் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 30 ஏக்கர் நெல் பயிர்கள் முற்றிலுமாக கருகி விட்டன. இதனால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் கூறினார்கள்.

இதே போல மலையாண்டஹள்ளி கிராமத்தில் காசிகவுண்டர் (60) என்பவர் தனது 2 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருந்த அதே ரக நெல் பயிர்கள் கதிர் எதுவும் இல்லாமல் கருகி போய் உள்ளது. இதே போல களர்பதி மலையாண்டஹள்ளியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகளின் பயிர்கள் கருகி உள்ளதால் விதை நெல் தரமானதாக இல்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தலைமுறை தலைமுறையாக தாங்கள் விவசாயம் செய்து வருவதாகவும், இதை போன்று நெல் பயிர்கள் தங்களுக்கு கருகியது இல்லை என்றும், நெல் மணிகள் விளையாமல் வளர்ந்ததில்லை எனவும் வேதனையுடன் கூறினார்கள். கருகிய பயிர்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் கணக்கிட்டு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 

Next Story