முன்னாள் ராணுவத்தினர் குறைகளை நேரடியாக தெரிவிக்க ‘தனி செயலி’ வசதி


முன்னாள் ராணுவத்தினர் குறைகளை நேரடியாக தெரிவிக்க ‘தனி செயலி’ வசதி
x
தினத்தந்தி 8 Jan 2018 4:15 AM IST (Updated: 8 Jan 2018 2:13 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ராணுவத்தினர் குறைகளை தெரிவிக்க ‘தனி செயலி’ வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக தென் மண்டல ராணுவ தளபதி கூறினார்.

திருச்சி,

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று முன்னாள் ராணுவத்தினருக்கான குறை தீர்க்கும் முகாம் மற்றும் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர், போரில் காயம் அடைந்த முன்னாள் ராணுவ வீரர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் தென் மண்டல ராணுவ தளபதி ஏ.கே.ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்காகவும், அவர்களை சார்ந்து இருக்கும் குடும்பத்தினரின் நலனிற்காகவும் இந்த முகாம் நடத்தப்படுகிறது. போரில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் கை, கால் உடைந்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த தலைமை ராணுவ தளபதி முடிவு செய்து உள்ளார். முன்னாள் ராணுவத்தினர், அவர்களது குடும்பத்தினர் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க தனி செயலி வசதி (மொபைல் ஆப்) ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வசதியானது வருகிற 15-ந்தேதி கொண்டாடப்பட உள்ள ராணுவ தினத்தன்று தொடங்கி வைக்கப்படும்.

தென் மண்டலத்தில் முன்னாள் ராணுவத்தினருக்காக 88 மருத்துவமனைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. மேலும் 9 மருத்துவமனைகள் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. 50 கி.மீ.க்கு ஒரு மருத்துவமனை என்ற அளவில் இவை அமைக்கப் படும். டாக்டர்கள் மற்றும் மருந்து தட்டுப்பாடு பிரச்சினைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். போரில் காயம் அடைந்த வீரர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், அவர்கள் சுய தொழில் செய்வதற்காகவும் நிதி உதவி செய்யப்படும். இதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த முகாமில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஏ.கே. ஆனந்த் வழங்கினார். அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம்களில் ஏராளமான முன்னாள் ராணுவத்தினரின் குடும்பத்தினர் சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பிரிகேடியர் சங்வான், கமாண்டிங் அதிகாரி மணிகண்டன் ஆகியோர் செய்திருந்த னர். திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் சக்தி கணேஷ் முகாமில் கலந்து கொண்டு பேசினார். 

Next Story