என்ஜினீயர் வீட்டில் நகை திருட்டு கேமராவில் மர்மநபரின் உருவம் பதிவு
அடுக்குமாடி குடியிருப்பில் என்ஜினீயர் வீட்டில் 6 பவுன் நகையை திருடிய கொள்ளையர்கள், மேலும் 9 வீடுகளில் திருட முயற்சி செய்தனர். கேமராவில் பதிவான மர்மநபரின் உருவத்தை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலந்தூர்,
சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம் பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ்(வயது 32). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர், தனது உறவினர் ஒருவருக்கு உடல் நிலை சரி இல்லாததால் வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்று விட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 3 மர்மநபர்கள் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் அந்த அடுக்குமாடி குடியிருப்புகள் புகுந்தனர். அவர்கள் சுரேஷ் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 6 பவுன் நகையை திருடினர்.
பின்னர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மற்றொரு வீட்டின் பூட்டை உடைக்க முயன்றனர். ஆனால் முடியாததால் அடுத்தடுத்து உள்ள ஒவ்வொரு வீடாக மொத்தம் 9 வீடுகளில் பூட்டு மற்றும் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர்.
கடைசியாக மணிகண்டன் என்பவரது வீட்டின் பூட்டை உடைக்கும் போது, சத்தம் கேட்டு எழுந்த அவர், கூச்சலிட்டார். மேலும் உதவிக்கு வரும்படி அருகில் உள்ளவர்களையும் தொலைபேசி மூலம் அழைத்தார். இதனால் பயந்துபோன கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற போலீசார், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.
அதில் மர்மநபர்கள் அந்த குடியிருப்புக்குள் வருவதும், கண்காணிப்பு கேமராக்களை திருப்பி பதிவுகளை மறைப்பதும் பதிவாகி இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் சுற்றித்திரிந்து உள்ளார். தற்போது கண்காணிப்பு கேமரா காட்சியில் பதிவாகி இருக்கும் உருவம், அந்த வடமாநிலத்தைச் சேர்ந்தவர்போல் தோற்றம் அளிக்கிறது.
எனவே அவர், இந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டு விட்டு தற்போது தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த திருட்டு மற்றும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து அந்த நபரையும், அவருடைய கூட்டாளிகளையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.