சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் கழிவறையில் வாலிபர் தற்கொலை


சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் கழிவறையில் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 8 Jan 2018 5:00 AM IST (Updated: 8 Jan 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

ரெயில் கழிவறையில் வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில், மும்பையில் இருந்து மும்பை மெயில் ரெயில் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும் ரெயிலின் காலிப்பெட்டிகள் பேசின்பிரிட்ஜ் பணிமனைக்கு மாற்று என்ஜின் மூலம் இழுத்துச் செல்லப்பட்டன.

சற்று நேரத்தில் ரெயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்காக ஊழியர்கள் வேலைக்கு வந்தனர். ஒவ்வொரு பெட்டியாக அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, முன்பதிவில்லாத ரெயில் பெட்டி கழிவறையை ஊழியர் ஒருவர் சுத்தம் செய்ய முயன்றார். ஆனால், கழிவறையின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், கழிவறையில் யாரோ இருப்பதை உணர்ந்து, சத்தம் கொடுத்தார். ஆனால், உள்ளே இருந்து எந்த பதிலும் வரவில்லை.

அதனைத் தொடர்ந்து, வெளிப்பக்கம் வந்த ஊழியர், கண்ணாடி ஜன்னல் வழியாக கழிவறைக்குள் பார்த்தார். அங்கே கண்ட காட்சி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாலிபர் ஒருவர் கழுத்து அறுபட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். உடனடியாக, இதுகுறித்த தகவல் சென்டிரல் ரெயில்வே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜெகதீசன் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று, ரெயில் கழிவறை கதவை உடைத்தனர். பின்னர், வாலிபரின் சடலத்தை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ரெயில் கழிவறை ஜன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. உடைந்த கண்ணாடி துண்டை வைத்தே அந்த வாலிபர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இறந்து கிடந்த வாலிபர் சென்னை மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த ஹரி கிருஷ்ணன் (வயது 37) என்பதுவும் தெரிந்தது. துணி வியாபாரம் செய்து வந்த அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

எனவே, திருமணம் ஆகாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசாரிடம் கேட்டபோது, “பேசின் பிரிட்ஜ் பணிமனையில் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோதுதான் ஹரி கிருஷ்ணன் ஏறி தற்கொலை செய்திருக்க வேண்டும். ரெயிலில் அவர் பயணித்து இருக்க வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தனர்.

ரெயிலில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story