பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு


பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 8 Jan 2018 4:00 AM IST (Updated: 8 Jan 2018 2:47 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து அதிகரித்துள்ளது.

செங்குன்றம்,

பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்த்தின்படி நெல்லூர் மாவட்டம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கடந்த மார்ச் மாதத்தில் வாட்டி எடுத்த கோடை வெயில் காரணமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் முழுமையாக வறண்டன.

கண்டலேறு அணையும் வறண்டதால் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்புக்கு சாத்தியம் ஏற்பட வில்லை. இந்த நிலையில் கண்டலேறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 மாதங்களாக கனமழை பெய்தது. இதனால் கண்டலேறு அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது.

தமிழக பொதுப்பணித்துறை உயர்மட்ட அதிகாரிகள் கடந்த மாதம் ஆந்திர மாநிலத்திற்கு சென்று அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவை சந்தித்து கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் கடந்த மாதம் 27-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்த பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டை இந்த மாதம் 1-ந் தேதி வந்தடைந்தது. 2-ந்தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. பூண்டி ஏரிக்கு முதலில் வினாடிக்கு 21 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இது படிப்படியாக அதிகரித்துள்ளது. நேற்று காலை வினாடிக்கு 270 கனஅடி விதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 26.17 அடியாக பதிவானது. 1,032 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

Next Story