டிப்ளமோ பயின்றவர்களுக்கு கடலோரக் காவல்படையில் பணி


டிப்ளமோ பயின்றவர்களுக்கு கடலோரக் காவல்படையில் பணி
x
தினத்தந்தி 8 Jan 2018 12:29 PM IST (Updated: 8 Jan 2018 12:29 PM IST)
t-max-icont-min-icon

கடலோரக் காவல் படையில், டிப்ளமோ பயின்றவர்களுக்கு ‘யந்திரிக்’ வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உட்பட்ட கடலோரக் காவல் படையில் யந்திரிக் 02 / 2018 பணி பயிற்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியக் குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்களுக்கான மற்ற தகுதிகள், பிற விவரங்கள்...

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களுக்கான குறைந்தபட்ச வயதுவரம்பு 18, அதிகபட்ச வயதுவரம்பு 22 ஆகும். அதாவது, 1996 ஆகஸ்டு 1 முதல் 2000 ஜூலை 31 வரை பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த இரு தேதிகளிலும் பிறந்தவர்களுக்கும் விண்ணப்பிக்கத் தகுதி இருக்கிறது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி:

மெட்ரிக்குலேஷன் அல்லது அதற்கு இணையான படிப்பு பயின்றவர்களும், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேஷன் (ரேடியோ/ பவர்) என்ஜினீயரிங்கில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. விண்ணப்பதாரர் களுக்கும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கும் 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளிக்கப்படும். பணியின்போது மரணம் அடைந்த கடலோரக் காவல் படை ஊழியர்களின் வாரிசுகளுக்கும் இந்தச் சலுகை உண்டு.

உடல் தகுதி:

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். மார்பளவு குறைந்தபட்சம் 5 செ.மீ. விரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். உயரத்துக்கு ஏற்ற எடை இருக்க வேண்டும். பார்வைத்திறன் நல்ல நிலையில் 6/24, பாதிக்கப்பட்ட நிலையில் 6/9, 6/12 என்ற அளவில் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

டிப்ளமோவில் பெற்ற அதிக மதிப்பெண் சராசரி அடிப்படையில், தகுதிபெற்ற விண்ணப்பதாரர் பட்டியல் www.joinindian coastguard.gov.in இணையதளத்தில் வெளியிடப்படும். அப்பட்டியலில் இடம்பெற்ற விண்ணப்பதாரர்கள், இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் தேர்வுகளுக்கான தேதி, நேரம், இடம் குறிப்பிடப்பட்ட அழைப்புக் கடிதம் மற்றும் மின் அனுமதி அட்டையை மேலே குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து பதி விறக்கம் செய்துகொள்ளலாம். அழைப்புக் கடிதமும், மின் அனுமதிக் கடிதமும் குறிப்பிட்ட இணையதளத்தில் உத்தேசமாக இம்மாத இறுதியில் பதிவேற்றம் செய்யப்படும்.

எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, மருத்துவத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பயிற்சியில் தேர்ச்சி பெற்றவர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு விண்ணப்பதாரர்கள் www.joinindiancoastguard.gov.in இணையதளம் சென்று ‘ஆப்பர்சூனிட்டீஸ்’ பட்டனை அழுத்த வேண்டும்.

அதில் குறிப்பிட்டுள்ளபடி வெற்றிகரமாக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தபின், குறிப்பிட்ட விண்ணப்பதாரருக்கு விசேஷ அப்ளிக்கேஷன்/ ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் வழங்கப்படும். விண்ணப்ப தாரர்கள் எதிர்காலப் பயன்பாட்டுக்கு அந்த எண்ணைக் குறித்துக்கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர் பட்டியல் வெளியானபின் விண்ணப்பதாரர்கள் தமக்கான ரோல் எண், புகைப்படம், சுய சான்றொப்பம் கொண்ட மின் அனுமதி அட்டை மற்றும் சான்றிதழ்களை நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். தேர்வின்போது அவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லா விட்டால் தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.

விண்ணப்பம் அனுப்ப கடைசித் தேதி: 18.1.2018.

மேலும் விவரங்களுக்கு www.joinindiancoastguard.gov.in இணையதளத்தைப் பார்க்கவும். 

Next Story