பொறியியல் பட்டத்துடன், கூடுதல் படிப்பும் அவசியம்..!
பொறியியல் துறை மாணவர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய கூடுதல் படிப்புகளையும், பயிற்சிகளையும் இங்கே பார்க்கலாம்.
பொறியியல் படிப்புகள் இன்று சர்வ சாதாரணமாகிவிட்டன. வீட்டிற்கு ஒரு என்ஜினீயர் என்ற அளவிற்கு ஏராளமான என்ஜினீயர்கள் உலா வருகிறார்கள். அதுமட்டுமின்றி, கட்டுக்கடங்காமல் பெருகிவிட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஏராளமான பொறியாளர்கள் தயாராகி வருகிறார்கள். இதனால் பொறியியல் தொடர்பான பணிகளுக்கு கடுமையான போட்டி நிலவுகிறது. ஆயிரம் பொறியாளர்களில் ஒருசிலருக்கு மட்டுமே துறை சார்ந்த வேலை கிடைக்கிறது. மற்றவர்கள் கிடைக்கும் வேலையை செய்து கொள்கிறார்கள். இதில் நீங்கள் எந்த ரகம் என்பதை, உங்களுடைய பொறியியல் அறிவும், கூடுதல் பயிற்சியுமே நிர்ணயிக்கிறது. முழுமையான பொறியியல் அறிவுடன், கூடுதலான பயிற்சி பெற்றவர்களுக்கு தான் பொறியியல் துறையில் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
சிவில் துறை
கட்டுமானம், வடிவமைப்பு தொடர்பான கணினி படிப்புகள் சிவில் மாணவர்களுக்கு அடிப்படையானவை. ஆட்டோ கேட், டிசைன் விஷ்வலைசேஷன் புரோ, ஸ்டாட் புரோ, ரிவிட் ஆர்கிடெக்ஷர், ரிவிட் எம்.பி.ஈ.டி.... உள்ளிட்டவை இந்தப் படிப்புகளில் அடங்கும். மேலும், பில்டிங் எஸ்டிமேஷன், காஸ்டிங், கம்ப்யூட்டர் எய்டட் லேண்ட் சர்வே போன்றவை அத்தியாவசியமான படிப்புகளாகும்.
கட்டுமான விபத்துகள், தீ அபாயங்கள், முதலுதவி பயிற்சி போன்றவையும் சிவில் துறையினரின் கூடுதல் திறனாக அமையும். பன்னாட்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் பணி வாய்ப்புகளுக்கு இவை கைகொடுக்கும். கல்லூரிப் படிப்பின் நிறைவாகக் குறுகிய காலச் சான்றிதழ் அல்லது பட்டயப் படிப்பாக இன்டிரீயர் டிசைனிங், கன்ஸ்டிரக்ஷன் மேனேஜ்மெண்ட் போன்ற பயிற்சிகளையும் பெறலாம்.
தகவல் தொழில்நுட்பம், கணினித் துறைகள்
பொதுவாகவே எல்லோருக்கும் புரோகிராமிங் லாங்குவேஜ் படிப்புகளான சி மற்றும் சி++ அவசியம். அதிலும் ஐ.டி., கணினி, எலக்ட்ரானிக்ஸ் மாணவர்கள் இந்தப் படிப்புகளில் முறையான சான்றிதழ் பெற்றிருப்பது வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும்.
மைக்ரோசாப்ட் எக்ஸல், அக்சஸ், எஸ்.கியூ.எல். போன்றவற்றில் மைக்ரோசாப்ட் நிறுவனத் தேர்வின் வாயிலாகச் சான்றிதழ் பெறுவது ஒரு வகை. மேலும் வெப்டிசைனிங் தொடர்பான HTML, JAVA script, ASP.NET, SEO, PHP, MySQL உள்ளிட்டவற்றையும் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் தொடர்பான அடிப்படைப் பயிற்சியையும் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஐ.டி. மாணவர்கள் இன்பர்மேஷன் செக்யூரிட்டி மற்றும் எத்திகல் ஹாக்கிங் குறித்த சான்றிதழ் படிப்புகளை தெரிந்துகொள்ளவேண்டும். ‘ஓபன் சோர்ஸ் டெக்னாலஜி’ குறித்த குறுகிய காலப் படிப்பைத் தரமான நிறுவனத்தின் வாயிலாகப் பெறலாம். ஆர்வத்தின் அடிப்படையில் அனிமேஷன் மற்றும் மல்டிமீடியா, ரோபாடிக்ஸ் துறைகளின் அடிப்படையை தொழில் பயிற்சியாகப் பெறலாம். டிஜிட்டல் மார்க்கெட்டிங், இகாமர்ஸ் தொடர்பான படிப்புகளையும் இணையம் வாயிலாகவே பெறலாம்.
எலக்ட்ரானிக்ஸ் சார்ந்த துறைகள்
எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பணி வாய்ப்புகளுக்கு எஸ்.எம்.டி எனப்படும் சர்பேசஸ் மவுண்ட் டிவைஸ் (Surface Mount Device) பயிற்சி அவசியம். மேலும் மொபைல் போன் தளத்தில் டெஸ்டிங், டெவலப்மெண்ட், அப்ளி கேஷன்ஸ் சார்ந்த தொழில்நுட்பப் பயிற்சிகளைப் பெற்றிருப்பது அவை சார்ந்த பணி வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.
எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மாணவர்கள் எம்பீடட் சிஸ்டம் (Embedded Systems) , பி.சி.பி. டிசைனிங் மற்றும் வி.எல்.எஸ்.ஐ. (PCB designing and VLSI) படிப்புகள் CCNA, CCNP போன்ற சிஸ்கோ சான்றிதழ் படிப்புகள் போன்றவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும்.
மெக்கானிக்கல் துறைகள்
மெக்கானிக்கல் துறை மாணவர்கள், கல்லூரி படிப்பை தவிர கூடுதல் பயிற்சிகளையும் எடுத்து கொள்ளவேண்டும். குறிப்பாக SQC and SPC courses, Six Sigma, 5S certification போன்ற குறுகிய காலப் படிப்புகளை தெரிந்து வைத்திருக்கவேண்டும்.
ஆட்டோமொபைல் துறைக்கு NX CAD, CAM, Nastran மென்பொருளின் படிப்புகளும் அவசியம். ஏரோநாட்டிக்கல், ஏரோஸ்பேஸ் மாணவர்கள் புராடக்ட் டிசைனிங் மற்றும் புராடக்ட் டெஸ்டிங் (Product Designing, Product Testing) ஆகிய வற்றுடன் Automotive Interior, Operation and Manufacturing, Crash Analysis, Solid and Vibration Testing தொடர்பான குறுகிய காலப் படிப்புகளையும் படிக்கலாம். இதனால் வேலைவாய்ப்பு பிரகாசமாகும். மேலும் Aircraft Maintenance Electrical System போன்ற தொழில் பயிற்சியையும் மேற்கொள்ளலாம்.
எலக்ட்ரிகல் துறை
எலக்ட்ரிகல் மாணவர்கள் பொதுவாக SMD சர்வீஸ் பயிற்சி, எலக்ட்ரிகல் ஆட்டோகேட், டிசைனிங் பயிற்சி, எலக்ட்ரிகல் சேப்டி போன்றவற்றை முடித்திருக்கவேண்டும். மேலும் Programmable logic controller, SCADA பயிற்சி களின் மூலம் அதிக வேலைவாய்ப்பு பெறலாம். வளரும் தொழில் துறையான சோலார் பேனல் சார்ந்த தொழில் பயிற்சியை அனுபவ அடிப்படையில் பெறுவது சிறப்பு.
Embedded Syst-ems, VLSI Testing, Networking தொடர்பான தொழில் பயிற்சிகள் வேலைவாய்ப்புக்கு உதவும்.
இதுபோன்ற கூடுதல் பயிற்சிகளுடன் ஆங்கில மொழியையும் கற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பாக ஆங்கிலத்தில் பேசுதல், எழுதுதல், தொடர்புகொள்ளுதல் போன்ற மொழி சார்ந்த திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம். இவற்றுக்கெனத் தனிப் பயிற்சியாகவோ, இணையத்தில் கிடைக்கும் வீடியோக்கள் உதவியுடனோ தயாராகலாம். பின்னர் படிப்படியாக துறை சார் கூடுதல் படிப்புகள், தொழில் பயிற்சிகளில் களம் இறங்கலாம்.
சமூக வலைத்தளங்கள், வலைப்பூக்கள், யு-டியூப் வாயிலாகவும் படிப்பு சார்ந்த தொழில்நுட்ப கருத்துகளை பொது வெளியில் பகிர்ந்துகொள்ளலாம். இந்த முயற்சிகள் படிப்பில் ஈடுபாட்டையும் சுவாரசியத்தையும் கூட்டும். மேலும் படிக்கும் துறை சார்ந்த தொடர்புகளையும் விரிவுபடுத்திக்கொள்ளலாம்.
Related Tags :
Next Story