புலியூர்குறிச்சியில் 7–வது நாளாக சத்தியாகிரகம்: குமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்


புலியூர்குறிச்சியில் 7–வது நாளாக சத்தியாகிரகம்: குமரியை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 8 Jan 2018 11:46 PM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் நேற்று 7–வது நாளாக நடந்த சத்தியாகிரக போராட்டத்தில் விவசாய சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டார். அப்போது, அவர் குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

தக்கலை,

குமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் கடந்த 2–ந் தேதி முதல் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் தொடர் சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இவர்களின் போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு அரசியல் கட்சியினர் தலைமை ஏற்று போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நேற்று 7–வது நாளாக நடந்த போராட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் லாரன்ஸ்(தி.மு.க.) தலைமை தாங்கினார். பாசனதுறை தலைவர் வின்ஸ் ஆன்றோ முன்னிலை வகித்தார்.

 சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

குமரி மாவட்ட மக்களுக்காக விவசாய அமைப்புகள் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமையில் தொடங்கிய இந்த சத்தியாகிர போராட்டம் சென்னை வரை எதிரொலிக்கிறது. கவர்னர் உரையில் ஒகி புயல் நிவாரணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஊர்– ஊராக ஆய்வுக்கு செல்லும் கவர்னர் குமரி மாவட்டத்தை முழு ஆய்வு செய்திருந்தால் ரூ. 30 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சேத மதிப்பீடுகளை அவரே குறிப்பிட்டிருப்பார்.

மத்திய அரசு குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகள் தங்களை காப்பாற்றி கொள்ள போராடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

போராட்டத்தில், பூமி பாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ், பாசன சபை கூட்டமைப்பு தலைவர் செல்லப்பா, கருங்கல் ஜார்ஜ், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story