கல்வீச்சு சம்பவங்களை தவிர்க்க ராமநாதபுரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கம்
கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ராமநாதபுரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் நிம்மதியாக பயணத்தை மேற்கொண்டனர்.
ராமநாதபுரம்,
அரசு போக்குவரத்துகழக ஊழியர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படாத வகையில் அண்ணா தொழிற்சங்க ஊழியர்களை வைத்தும், தற்காலிக பணியாளர்களை வைத்தும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ் போக்குவரத்து சீராக்கப்பட்டுஉள்ளது.
இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்நாளில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பு அடுத்தடுத்த நாட்களில் ஏற்படாதவாறு மாற்று ஏற்பாடுகள் மூலம் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்து பயணிகள் பாதிக்காத வகையில் நிலைமை சீராக்கப்பட்டது.
ஆங்காங்கே ஒரு சில இடங்களில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்ததால் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மட்டுமின்றி பயணிகளும் பயணத்திற்கு அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று கலெக்டர் நடராஜன் பஸ்நிலையம் மற்றும் டெப்போக்களுக்கு சென்று ஆய்வு செய்து அனைத்து வழித்தடங்களுக்கும் முழு அளவில் பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதன்காரணமாக நேற்று இயல்பான அளவில் பஸ் போக்குவரத்து நடந்தது. பயணிகளுக்கு அச்சத்தை போக்கும் வகையிலும், பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க மாவட்ட கலெக்டர் நடராஜன், போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக செல்லும் பஸ்கள், மதுரை செல்லும் பஸ்கள், திருவாடானை, திருச்சி செல்லும் பஸ்கள் முதலியவற்றிற்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. இதற்காக ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மேற்கண்ட வழித்தடங்களில் செல்லும் பஸ்களின் முன்னால் சப்–இன்ஸ்பெக்டர் அந்தஸ்தினாலான போலீசார் இருசக்கர வாகனத்தில் சென்றனர். போலீஸ் நிலைய எல்லை பகுதி வரை சென்ற இந்த போலீசார் அடுத்த எல்லையில் அந்த பகுதி போலீசாரிடம் பஸ்சை ஒப்படைத்துவிட்டு அங்கிருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த பஸ்சை பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
இதன்காரணமாக பஸ்சில் கல்வீச்சு சம்பவம் டிரைவர்,கண்டக்டர்கள் மீது தாக்குதல் போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் போலீசார் பாதுகாப்பு அளித்து பஸ்களை பத்திரமாக அழைத்து சென்றதோடு, பயணிகளுக்கு பாதுகாப்பு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த போலீஸ் பாதுகாப்பிற்கு பொதுமக்களும், பயணிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.