அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான பணி தொடங்கியது கலெக்டர் பந்தல்கால் நட்டார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16–ந்தேதி நடக்கிறது. அதற்கான பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. முன்னதாக பந்தல்கால் அமைக்கும் விழாவில் கலெக்டர் பந்தல்கால் நட்டார்.
அலங்காநல்லூர்,
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விழா தமிழகமெங்கும் இந்த புத்தாண்டின் முதல் தேதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வருகிற 14–ந்தேதி பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரத்திலும், மறுநாள் (15–ந்தேதி) பாலமேட்டிலும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வருகிற 16–ந்தேதியும் நடைபெறுகிறது.
இதையொட்டி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் பணியாக வாடிவாசல் அருகில் பந்தல்கால் நடும் விழா நடந்தது. அதில் கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கி பந்தல்காலை நட்டார். இதில் ஜல்லிக்கட்டு விழா குழுவினர், வாடிப்பட்டி தாசில்தார் பார்த்திபன், பேரூராட்சி செயல் அலுவலர் ஜூலான்பானு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், யூனியன் ஆணையாளர்கள் நளினாபரமேஸ்வரி, கலா, மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உள்பட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
அதைதொடர்ந்து பார்வையாளர்கள் அமரும் மேடை, முக்கிய பிரமுகர்கள் அமரும் மேடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப்புகழ் பெற்றதாகும். இந்த விழாவிற்கு வழக்கம்போல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த ஆண்டு ஏராளமானவர்கள் வந்து பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அரசு சார்பிலும், விழாக்கமிட்டியினர் சார்பிலும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் ஜல்லிக்கட்டுக்கான பல்வேறு பணிகள் நடைபெற தொடங்கி உள்ளன. இதேபோல காளை வளர்ப்போரும், மாடுபிடி வீரர்களும் தங்களது பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர்.