போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் ஆட்டோ டிரைவர் ஓட்டி சென்ற அரசு பஸ் மின்கம்பத்தில் மோதியது


போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால் ஆட்டோ டிரைவர் ஓட்டி சென்ற அரசு பஸ் மின்கம்பத்தில் மோதியது
x
தினத்தந்தி 9 Jan 2018 5:00 AM IST (Updated: 9 Jan 2018 12:36 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் காரணமாக, ஆட்டோ டிரைவர் ஓட்டி சென்ற அரசு பஸ் மின்கம்பத்தில் மோதியது. போக்குவரத்து, மின்வாரிய துறையினர் வாக்குவாதத்தின் போது, பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் மாயமானார்.

திருப்பரங்குன்றம்,

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், தினக்கூலி அடிப்படையில் வெளிநபர்களை அரசு பஸ்களுக்கு டிரைவர்கள், கண்டக்டர்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் டேனியல் (வயது 30) என்பவர் திருப்பரங்குன்றம் கிளை அரசு போக்குவரத்து பணிமனைக்கு விண்ணப்பம் செய்து, அவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நேற்று அரசு பஸ்சை மதுரை பெரியார் பஸ்நிலையத்தில் இருந்து திருநகருக்கு ஒட்டி சென்றார்.

திருநகர் 6–வது பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஒரு வளைவில் பஸ்சை திருப்பி சென்ற போது கவனக்குறைவால் ரோட்டின் மையப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் பஸ்சை மோதினர். அதில் மின்கம்பம் பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் சிக்கி வளைந்தது. இதைப்பார்த்த பஸ்சில் இருந்த பயணிகள் லேசான காயமடைந்து பயத்தில் அலறினர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

மேலும் மின்கம்பத்தில் மின்சாரம் சப்ளை ஆகி கொண்டிருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மின்கம்பி அறுந்து விழாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து திருப்பரங்குன்றம் கிளை அரசு போக்குவரத்து மேலாளர், மின்வாரிய துறை உதவி பொறியாளர் ஆகியோர் ஊழியர்களுடன் வந்தனர்.

அப்போது மின்வாரியத்துறையினர் மின்கம்பம் சேதமடைந்தற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கூறியதால், 2 துறை ஊழியர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் நிலை உருவானது. அதைத்தொடர்ந்து திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வைத்தார். இந்தநிலையில் அரசு பஸ்சை ஓட்டி வந்த ஆட்டோ டிரைவர் டேனியல் திடீரென மாயமானார்.


Next Story