மாவட்டத்தில் மண் அள்ள அனுமதிச்சீட்டு வழங்கியதில் முறைகேடு, நாம் தமிழர் கட்சியினர் புகார்


மாவட்டத்தில் மண் அள்ள அனுமதிச்சீட்டு வழங்கியதில் முறைகேடு, நாம் தமிழர் கட்சியினர் புகார்
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 9 Jan 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் மண் அள்ளுவதற்கு அனுமதிச்சீட்டு வழங்கியதில் முறைகேடு நடந்து உள்ளதாகவும், கனிம வளத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு அளித்தனர்.

தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்தும், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களிடம் இருந்தும் மனுக்கள் வாங்கினார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை சார்பில், மாவட்ட நிர்வாகிகள் சிலர் கலெக்டரிடம் தங்கள் உலா சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை வழங்கினர். அதில், ‘நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம். முஸ்லிம்களிடம் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி இப்படி ஒரு கடுமையான சட்டத்தை அரசு உருவாக்கி இருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இந்த சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று குடியரசு தலைவரை கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மண்டல பொறுப்பாளர் அன்பழகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், கிழக்கு மாவட்ட செயலாளர் தம்பிஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–

தேனி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மணல், கரம்பை, செம்மண், வண்டல் போன்ற மண் வகைகளை கொள்ளையடித்து பிறமாவட்டங்களுக்கு கடத்திச் செல்கிறார்கள். இதுகுறித்து தேனி மாட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனரிடம் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாவட்டத்தில் 1–1–2017 முதல் 15–11–2017 வரை மணல், செம்மண், கரம்பை, வண்டல் போன்ற மண் வகைகளை அள்ளுவதற்கு அனுமதி வழங்கவில்லை என்று தகவல் அளித்துள்ளார். ஆனால், திண்டுக்கல் காந்திகிராமத்தை சேர்ந்த நபருக்கு 3–7–2017 அன்றைய தேதியிட்டு மண் அள்ளுவதற்கு அனுமதிச்சீட்டு வழங்கியுள்ளார். இதுபோன்ற பல்வேறு முறைகேடான அனுமதி வழங்கி கனிமவளக் கொள்ளை நடக்கிறது. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்தி, கனிமவள கொள்ளையை தடுத்து, சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெய்முருகேஷ், கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘காமராஜர் பெயரில் செயல்படும் தேனி பழைய பஸ் நிலையத்தில் காமராஜர் பெயர் தெரியாத அளவுக்கு பதாகை சேதம் அடைந்துள்ளது. எனவே, நுழைவு வாயில் பகுதியில் காமராஜர் பெயரில் ஆர்ச் வளைவு அமைக்க வேண்டும். வைகை அணையில் காமராஜருக்கு சிலை அமைக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

ஆண்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட கோரையூத்து, மந்தியூத்து மற்றும் வண்டியூர் ஆகிய மலைக் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், ‘நாங்கள் 79 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வருகிறோம். அந்த நிலங்களுக்கு நிலவரி முறையாக செலுத்தி வருகிறோம். எங்களுக்கு பட்டா இல்லாததால் வனத்துறையினர் அடிக்கடி தொந்தரவு செய்கின்றனர். எனவே, எங்களின் விவசாய நிலங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவுப்படி தனிநபர் வன உரிமை பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறி இருந்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரியகுளம் நகரை செயலாளர் ஜோதிமுருகன் மற்றும் நிர்வாகிகள், கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ‘தென்கரை வைகை அணை சாலையில், நகராட்சி வணிக வளாகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டது. கோர்ட்டு உத்தரவுப்படி அந்த கடை அகற்றப்பட்டது. தற்போது மீண்டும் அதே இடத்தில் கடை அமைக்க முயற்சி நடப்பதாக தெரிகிறது. அங்கு கடை அமைத்தால் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் சிரமம் அடைவார்கள். எனவே, அங்கு மீண்டும் கடை அமைக்காமல் தடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.


Next Story