அரசு நிர்ணயித்த விலைக்கு கொள்முதல் செய்யக்கோரி கரும்புகளுடன் விவசாயிகள் சாலை மறியல்
அரசு நிர்ணயித்த விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று சின்னமனூரில் கரும்புகளுடன் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சின்னமனூர்,
சின்னமனூர்–குமுளி தேசிய நெடுஞ்சாலையில் செங்கரும்புகளுடன் விவசாயிகள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சிலர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது விவசாயிகள் கூறியதாவது:–
சின்னமனூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த கரும்புகள் அறுவடைக்கு தயாராக உள்ளன. தமிழக அரசு 10 எண்ணிக்கை கொண்ட செங்கரும்பு கட்டு ஒன்றுக்கு ரூ.240–க்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்தது. ஆனால் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ரூ.140–க்கு கரும்புகளை கொள்முதல் செய்கின்றனர். கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். எங்களுக்கு அரசு நிர்ணயித்த விலைக்கு செங்கரும்புகளை கொள்முதல் செய்யவேண்டும். இதனை மாவட்ட கலெக்டர் நேரடி கண்காணிப்பில் மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தகவலறிந்த சின்னமனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இமானுவேல் ராஜ்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை குறித்து கலெக்டரிடம் தெரிவிக்கப்படும். அரசு நிர்ணயித்த விலைக்கு கரும்புகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். மறியலால் அந்த சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.