வீடுபுகுந்து பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை: 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது


வீடுபுகுந்து பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளை: 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 9 Jan 2018 4:15 AM IST (Updated: 9 Jan 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் நகரில் வீடுபுகுந்து பெண்ணை கட்டிப்போட்டு நகைகளை கொள்ளையடித்த வழக்கில், 6 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையை சேர்ந்தவர் ரேக்லாண்ட் ஜெபராஜ். அவருடைய மனைவி மேரி. கடந்த 2011–ம் ஆண்டு மேரி வீட்டில் தனியாக இருந்தபோது, மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். பின்னர் மேரியை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த 48 பவுன் நகை, கேமரா, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் அவருடைய காரை எடுத்து சென்று பழனி அடிவாரம் பகுதியில் நிறுத்திவிட்டு தப்பியுள்ளனர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிவு விசாரணையை தொடங்கினர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர். அப்போது நீலகிரி மாவட்டம் குன்னூர் கம்பிசோலை பகுதியை சேர்ந்த லூர்காஸ் மகன் நம்பிக்கைராஜ் (வயது 28), ஊட்டியை சேர்ந்த விபின் (27) ஆகியோர் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.

அவர்கள் 2 பேரும் ஊட்டியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைக்கானல் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் ஊட்டிக்கு விரைந்தனர். பின்னர் அங்கு பதுங்கி இருந்த 2 பேரையும் கைது செய்து கொடைக்கானலுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:–

கொடைக்கானலில் பெண்ணை கட்டிப்போட்டு கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களது கூட்டாளிகளான ஊட்டியை சேர்ந்த சங்கர் (38), சந்தோஷ் (36), ஜெரால்டு ஆகியோருடன் சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர்.

இதில் சங்கர், சந்தோஷ் ஆகியோர் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள ஜெரால்டு என்பவரை வலைவீசி தேடி வருகிறோம். நண்பர்களான இவர்கள் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி இருக்கலாம். கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் இருந்து 3½ தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவை குறித்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story