கோவை காந்திபுரத்தில் தனியார் பஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து, தற்காலிக டிரைவர் ஓட்டம்


கோவை காந்திபுரத்தில் தனியார் பஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து, தற்காலிக டிரைவர் ஓட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2018 4:15 AM IST (Updated: 9 Jan 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் தனியார் பஸ் மீது அரசு பஸ் மோதியதில் கண்ணாடி உடைந்ததால் பயந்து போன தற்காலிக டிரைவர் பஸ்சை விட்டு இறங்கி ஒடினார்.

கோவை,

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தினால் கோவையில் சில அரசு பஸ்கள் தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. கோவையை அடுத்த வடவள்ளியில் நேற்று முன்தினம் தற்காலிக டிரைவர் ஓட்டிய அரசு பஸ் மோதி முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று மதியம் ஒரு மணியளவில், காந்திபுரத்திலிருந்து தேவராயபுரம் செல்லும் தனியார் பஸ் (தடம் எண் 99) காந்திபுரம் டவுன்பஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்து நின்றது. அந்த பஸ்சுக்கு பின்னால் வந்த அரசு டவுன் பஸ்(தடம் எண் 33)காந்திபுரத்திலிருந்து கிணத்துக்கடவுக்கு செல்வதாக வந்து கொண்டிருந்தது. அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் ஓட்டினார்.

முன்னால் நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சை அரசு பஸ் முந்திச் சென்று இடது பக்கம் திருப்பியபோது தற்காலிக டிரைவர் இடது புறம் பக்கவாட்டை கவனிக்கவில்லை. இதில் அரசு பஸ்சின் பக்கவாட்டு படிக்கட்டு தனியார் பஸ்சின் பின்பக்கத்தில் மோதியது. இதனால் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது.

விபத்து நடந்ததும் தற்காலிக டிரைவர் பஸ்சின் என்ஜினை ‘ஆப்’ செய்யாமல் பஸ்சை விட்டுஇறங்கி ஓடி விட்டார். விபத்து நடந்ததும் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அரசு பஸ்சில் இருந்து அலறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடி வந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் அங்கு திரண்டனர். அவர்கள் அரசு தற்காலிக டிரைவரை தேடினார்கள். ஆனால் அவரை காணவில்லை.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அருகில் இருந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்படியிருந்தும் விபத்து ஏற்படுத்திய தற்காலிக டிரைவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதை தொடர்ந்து சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ்சை மற்றொரு டிரைவர் ஓட்டிச் சென்று அருகில் உள்ள காட்டூர் போலீஸ்நிலையத்தில் நிறுத்தினார்.

இதுகுறித்து தனியார் பஸ் டிரைவர்கள் சிலர் கூறியதாவது:–

அனுபவம் இல்லாத டிரைவர்களை கொண்டு அரசு பஸ்களை இயக்குவது ஆபத்தானது. அது மாதிரி தான் காந்திபுரம் பஸ் நிலையத்திலும் இந்த விபத்து நடந்துள்ளது. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நகர்ப் பகுதியில் சாலையை மட்டும் பார்த்து ஓட்டாமல் பக்கவாட்டிலும் பார்த்து பஸ்சை இயக்க வேண்டும். ஆனால் தனியார் பஸ் மீது மோதிய அரசு பஸ்சின் தற்காலிக டிரைவர் பக்கவாட்டில் பார்க்கவில்லை. இதுபோன்ற டிரைவர்களை கொண்டு பஸ்களை இயக்கி யாராவது பலியானால் அதற்கு யார் பொறுப்பேற்பது. இத்தகைய சம்பவங்களினால் அரசு பஸ்களில் செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story