மயான வசதி கேட்டு பிணத்தை நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் சாலைமறியல்
தாளவாடி அருகே மயான வசதி கேட்டு பிணத்தை நடுரோட்டில் வைத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாளவாடி,
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள நேதாஜி சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் சிக்கம்மா (வயது 80). வயது முதிர்வின் காரணமாக நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதைத்தொடர்ந்து ஒரு பாடையில் சிக்கம்மாவின் உடலை வைத்து அவருடைய உறவினர்கள் தாளவாடி– ராமாபுரம் சாலையில் உள்ள மயானத்தில் எரியூட்டுவதற்காக நேற்று மதியம் 2 மணி அளவில் தூக்கி சென்றனர். இதுபற்றி அறிந்ததும் தாளவாடி வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிக்கம்மாவின் உடலை மயானத்தில் எரியூட்டக்கூடாது என கூறினர்.
அப்போது பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறுகையில், ‘வருவாய்த்துறை சார்பில் தாளவாடி– ராமாபுரம் சாலையில் மயானத்துக்கான இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த இடத்துக்கான முறையான அங்கீகாரம் அரசிடம் இருந்து வரவில்லை. எனவே இங்கு பிணத்தை எரியூட்டக்கூடாது’ என்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த சிக்கம்மாவின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பிணத்தை தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் செல்லும் ரோட்டின் நடுவே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள், ‘எங்கள் பகுதிக்கு மயான வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். இதன்காரணமாக வருவாய்த்துறை சார்பில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு மயானத்துக்கான இடம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிக்கம்மாவின் உடலை எரியூட்டுவதற்காக நாங்கள் கொண்டு வந்து உள்ளோம். ஆனால் மயானத்துக்கான முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி தற்போது சிக்கம்மாவின் உடலை எரியூட்ட மறுக்கிறீர்களே. எங்களுக்கு உடனடியாக மயான வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் கூறுகையில், ‘இன்னும் ஒரு மாதத்துக்குள் அரசிடம் இருந்து மயானத்துக்கான முறையான அனுமதி பெற்று தரப்படும். எனவே தற்போது சிக்கம்மாவின் உடலை அவருக்கு சொந்தமான இடத்தில் எரியூட்டி எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்,’ என்றனர்.
இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சிக்கம்மாவின் உடலை அவருக்கு சொந்தமான இடத்தில் எரியூட்டுவதற்காக மாலை 4 மணி அளவில் தூக்கி சென்றனர். இந்த சம்பவம் காரணமாக தாளவாடி– சாம்ராஜ் நகர் ரோட்டில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.