ஈரோடு தாலுகா அலுவலகத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போர் மனு கொடுக்கும் போராட்டம்


ஈரோடு தாலுகா அலுவலகத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போர் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 9 Jan 2018 3:45 AM IST (Updated: 9 Jan 2018 1:31 AM IST)
t-max-icont-min-icon

அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போர் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

ஈரோடு,

ஈரோடு தாலுகா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருப்போர் நல சங்கம் சார்பில் நேற்று தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் எம்.நாச்சிமுத்து தலைமை தாங்கினார். தாலுகா குழு உறுப்பினர்கள் என்.நாகராஜன், கே.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்தியக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.மாரிமுத்து, தாலுகா செயலாளர் பி.ராஜா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பாளர் எம்.அண்ணாதுரை ஆகியோர் பேசினார்கள்.

போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகள் வருமாறு:–

* எந்த நிலமும், உடமைகளும் இல்லாமல் அரசு நிலத்தில் வீடுகட்டி 75 ஆண்டுகாலமாக குடியிருந்து வரும் ஏழை உழைப்பாளி மக்களை நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில் சொந்த மண்ணில் அகதிகள் ஆக்காதே.

* அரசு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு தமிழக அரசு வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். அதுவரை குடியிருக்கும் வீடுகளை அகற்றக்கூடாது.

வீட்டுமனைகள் கேட்டு மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு தேவையான டாக்டர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்தி பலதுறை சிறப்பு ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் போராட்டத்தில் கலந்து கொண்ட 100–க்கும் மேற்பட்டவர்கள் தாசில்தார் அமுதாவிடம் மனு கொடுத்தனர்.


Next Story