போக்குவரத்து தொழிலாளர்கள் 5–வது நாளாக வேலை நிறுத்தம்: அரசு பஸ்களில் செல்ல பொதுமக்கள் அச்சம்


போக்குவரத்து தொழிலாளர்கள் 5–வது நாளாக வேலை நிறுத்தம்: அரசு பஸ்களில் செல்ல பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 9 Jan 2018 4:15 AM IST (Updated: 9 Jan 2018 1:39 AM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து தொழிலாளர்கள் 5–வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டபோதிலும் அதில் செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

விழுப்புரம்,

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 4–ந் தேதி மாலை முதல் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நேற்றும் 5–வது நாளாக நீடித்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக முதல் 2 நாட்களில் பஸ் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட நிர்வாகமும், அரசு போக்குவரத்துக்கழகமும் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை பயன்படுத்தி அரசு பஸ்களை இயக்க எடுத்த நடடிக்கையினால் ஓரளவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

நேற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் தற்காலிக டிரைவர்கள், கண்டக்டர்களை அதிகமாக பயன்படுத்தி அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அதன்படி நேற்று ஓரளவு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. விழுப்புரம் 1, 2, 3–வது பணிமனைகள், கள்ளக்குறிச்சி 1, 2–வது பணிமனைகள், உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய 11 பணிமனைகளில் இருந்தும் காலை முதல் வழக்கம்போல் பஸ்கள் புறப்பட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களுக்கு சென்றன.

ஆனால் அரசு பஸ்கள் தற்காலிக டிரைவர்கள் மூலம் இயக்கப்பட்டதால் பாதுகாப்பு கருதி பெரும்பாலான பொதுமக்கள் அந்த பஸ்களில் பயணம் செய்வதற்கு அச்சப்பட்டனர். இதனால் அரசு பஸ்கள், அந்தந்த பஸ் நிலையங்களிலேயே பல மணி நேரம் காத்திருந்ததை காண முடிந்தது. பெயரளவில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டபோதிலும் அதில் பொதுமக்கள் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

பெரும்பாலான பொதுமக்கள் அரசு பஸ்களில் செல்வதை விட தனியார் பஸ்களில் செல்வதையே விரும்பியதால் அனைத்து தனியார் பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதை பயன்படுத்தி தனியார் பஸ்களில் கட்டணம் சற்று அதிகமாக வசூலித்தனர். அதையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பாக சென்றாலே போதும் எனக்கருதி தனியார் பஸ்களில் அதிகளவில் சென்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், இன்று (அதாவது நேற்று) மாவட்டம் முழுவதும் உள்ள 11 பணிமனைகள் மூலம் 90 சதவீதத்திற்கு மேல் பஸ்கள் இயக்கப்பட்டதாக தெரிவித்தார். ஆனால் இதை மறுத்த போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், 20 முதல் 30 சதவீத அரசு பஸ்களே இயக்கப்பட்டுள்ளன என்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், அண்ணா தொழிற்சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் பணிக்கு செல்லாமல் முழுமையாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளோம். அரசுக்கு கணக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகாரிகள், வெளியாட்களை வைத்து பெயரளவிற்கு பஸ்களை இயக்கி வருகின்றனர். பெருமளவில் பஸ்களை இயக்கி உள்ளதாக கூறுகின்றனர். ஆனால் தற்காலிக டிரைவர்களால் பாதுகாப்பான பயணத்தை தர முடியாது என்பதில் பொதுமக்கள் உறுதியாக உள்ளனர். தனியார் பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதே தவிர அரசு பஸ்கள் பெரும்பாலும் காலியாகவே செல்கின்றன என்றனர்.


Next Story