தற்காலிக டிரைவராக பணியில் சேர்ந்த மளிகை கடைக்காரர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் வாய்க்காலுக்குள் பாய்ந்தது


தற்காலிக டிரைவராக பணியில் சேர்ந்த மளிகை கடைக்காரர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் வாய்க்காலுக்குள் பாய்ந்தது
x
தினத்தந்தி 9 Jan 2018 4:00 AM IST (Updated: 9 Jan 2018 1:47 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் தற்காலிக டிரைவராக பணியில் சேர்ந்த மளிகை கடைக்காரர் ஓட்டிச்சென்ற அரசு பஸ் வாய்க்காலுக்குள் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடரும் இது போன்ற சம்பவங்களால் பயணிகள் கடும் அச்சமடைந்துள்ளனர்.

விருத்தாசலம்,

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 4-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். உரிய பயிற்சி இல்லாத தற்காலிக டிரைவர்களை கொண்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் விருத்தாசலத்தில் தற்காலிக பஸ் டிரைவரான எருமனூரை சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டிச்சென்ற பஸ் மோதியதில் சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான டேவிட் ஷியோன்குமார் என்பவர் பரிதாபமாக இறந்தார். மேலும் சாமுவேல், சாரன்சுவீட்டி ஆகிய 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று விருத்தாசலத்தில் தற்காலிக பஸ் டிரைவரால் மேலும் ஒரு விபத்து நடந்தது.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

விருத்தாசலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை 2-ல் இருந்து பஸ் ஒன்று, பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சை தற்காலிக டிரைவராக பணியில் சேர்ந்த மளிகை கடைக்காரர் பாரதி என்பவர் ஓட்டினார். இந்த நிலையில் அந்த பஸ் சிறிது தூரம் சென்றதும் டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி பணிமனை அருகே உள்ள சாலையோர வாய்க்காலுக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் தற்காலிக டிரைவர் பாரதி காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உரிய பயிற்சி இல்லாமல் பஸ் ஓட்டியதால் தான், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிலை ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனி உரிய பயிற்சி இல்லாத டிரைவர்களை கொண்டு அரசு பஸ் இயக்குவதை நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தற்போது இந்த பஸ் வாய்க்காலுக்குள் பாயாமல் ஊருக்குள் சென்று இருந்தால் பெரிய அளவில் விபத்து நடந்து, பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என்றனர்.

விருத்தாசலத்தில் தற்காலிக டிரைவர் இயக்கும் பஸ்கள் விபத்தில் சிக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருவதால் பயணிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

Next Story