திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வி‌ஷ பாட்டிலை கழுத்தில் அணிந்தபடி மனு கொடுக்க வந்த மூதாட்டி


திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வி‌ஷ பாட்டிலை கழுத்தில் அணிந்தபடி மனு கொடுக்க வந்த மூதாட்டி
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 9 Jan 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வி‌ஷ பாட்டிலை கழுத்தில் அணிந்தபடி மனு கொடுக்க வந்த மூதாட்டியை தடுத்து நிறுத்திய போலீசார் அவரிடம் இருந்து வி‌ஷ பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்காக தாராபுரம் அண்ணாநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை நல்லமணி(வயது 87) தனது கழுத்தில் பூச்சி மருந்து பாட்டிலை கட்டி தொங்கவிட்டபடி மனு கொடுக்க வந்தார்.

இவரை பார்த்ததும் அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அந்த மூதாட்டியை தடுத்து நிறுத்தி வி‌ஷ பாட்டிலை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் கலெக்டரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

நான் குடியிருக்கும் வீட்டை எனது மகன் ஜவஹர் சீனிவாசன் ரூ.15 லட்சத்திற்கு அங்குள்ள ஒரு நபரிடம் அடமானம் வைத்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் எனது வீட்டை அந்த நபர் அவருடைய பெயருக்கு கிரையம் செய்து விட்டார். தற்போது நாங்கள் அந்த வீட்டில் குடியிருந்து வருகிறோம். இந்த நிலையில் அந்த நபர் வீட்டை காலி செய்யும் படி எங்களை வற்புறுத்தி வருகிறார்.

அடமானம் வைத்த எனது மகன் இறந்துவிட்ட நிலையில் இதுகுறித்து போலீசாரிடம் புகார் கொடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எனது வீட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து அங்கிருந்து அவர் புறப்பட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story