மூதாட்டியை கொலை செய்த பூ வியாபாரி கைது
புதுவையில் மூதாட்டியை கொலை செய்த பூ வியாபாரியை போலீசார் கைது செய்தனர். கத்தியால் குத்தியதில் மயங்கி கிடந்தவரை பலாத்காரம் செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை சாரம் தென்றல் நகரை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி மேரி(வயது 60) இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜூ இறந்து விட்டார். இந்தநிலையில் கடந்த 25–ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற மேரி வீடு திரும்பவில்லை. இதனையடுத்து உறவினர்கள் பல இடங்களிலும் தேடிப்பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுதொடர்பாக கோரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மேரியை தேடிவந்தனர்.
இந்தநிலையில் கடந்த 3–ந் தேதி அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தென்னை ஓலை மற்றும் மட்டை குவியலில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது தெரியவந்தது. உடனே கோரிமேடு போலீசார் அங்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் தென்னை மட்டை குவியலில் பிணமாக கிடந்தது காணாமல் போனதாக தேடப்பட்ட மேரி என்பது தெரியவந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனையில் மேரி பலாத்காரம் செய்யப்பட்டதுடன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது அம்பலமானது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்னந்தோப்பு பகுதியில் சுற்றித் திரிந்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்தனர்.
மேரியை கற்பழித்து கொலை செய்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்து விசாரிக்க வடக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் தலைமையில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சிறப்பு அதிரப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
சம்பவத்தன்று தென்னந்தோப்பிற்கு சென்றவர்களை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்யும் பூமியான்பேட்டை பகுதியை சேர்ந்த பிரகாஷ்(30) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து விசாரித்தபோது மேரியை கற்பழித்து பின்னர் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து பிரகாசை போலீசார் கைது செய்தனர். போலீசில் பிரகாஷ் அளித்துள்ள வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது:–
சாரம் பகுதியில் உள்ள பூக்கடையில் பூ வியாபாரம் செய்து வருகிறேன். கிறிஸ்துமஸ் அன்று நான் தென்னந்தோப்பில் தனியாக அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்தேன். அப்போது தேங்காய் பொறுக்குவதற்காக மேரி அங்கு வந்தார். எப்போதாவது ஒரு முறை அவர் என்னுடன் மது அருந்துவார். அதன்படி அன்று நான் குடித்துக்கொண்டிருந்தபோது மேரியும் மது அருந்தினார்.
அப்போது எனக்கு மேரி மீது ஆசை ஏற்பட்டது. அவரிடம் உல்லாசமாக இருக்கும்படி கேட்டேன். அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம் ஏற்பட்டது. எனவே நான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மேரியின் இடுப்பில் குத்தினேன். இதனால் அவர் மயங்கி விழுந்தார். அந்தநிலையிலும் நான் அவரை பலாத்காரம் செய்தேன்.
மயக்கம் தெளிந்தால் அவர் நடந்த சம்பவத்தை வெளியே சொல்லி விடுவார் என கருதி அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் அவரது உடலின் மீது அங்கு கிடந்த தென்னை ஓலை மற்றும் மட்டை குவியல்களை போட்டு மறைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன். ஆனால் போலீசார் துப்புதுலக்கி என்னை கைது செய்து விட்டனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் பிரகாசிடம் இருந்து கத்தி, ரத்த கறை படிந்த துணிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். பிரகாசுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.