கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சாலை மறியல் முயற்சி


கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் சாலை மறியல் முயற்சி
x
தினத்தந்தி 9 Jan 2018 4:30 AM IST (Updated: 9 Jan 2018 2:27 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

தாமரைக்குளம்,

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் இருந்து 2.57 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் வைத்த கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்காததால் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் கடந்த 4-ந்தேதி இரவிலிருந்து தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள போக்குவரத்துக்கழக கிளை பணிமனையில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். தினசரி கூலி அடிப்படையில் கனரக வாகனங்களை ஓட்டி வருபவர்கள், கல்விநிறுவன டிரைவர்கள் உள்ளிட்டோரை வைத்து அரசு புறநகர் பஸ்கள், நகர பஸ்களை பணிமனை நிர்வாக அதிகாரிகள் இயக்கினர்.

இதையடுத்து நேற்று அரியலூர் அண்ணாசிலை அருகே போக்குவரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், மறியலில் ஈடுபட முயன்ற போக்குவரத்துக்கழக ஊழியர்கள் 150 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட போக்குவரத்துக்கழக ஊழியர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story