சேலம் தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டம்
சேலம் தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
ஆன்–லைன் சான்றுகளை பரிந்துரை செய்ய வழங்கப்பட்ட மடிக்கணினிகளுக்கு இணையதள சேவை வசதி செய்ய வேண்டும், மேலும் அந்த வசதிக்கான மாத செலவுத்தொகையை அரசே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், நகர பட்டா மாறுதல், கிராம நிர்வாக அலுவலர்கள் பரிந்துரை இன்றி அமல்படுத்துவதை கண்டித்தும் கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சேலத்தில் உள்ள 3 தாலுகா அலுவலகங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று மாலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட அனைவரும் இரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூறும் போது, ‘‘எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தி இன்று(நேற்று) மாலை முதல் நாளை(இன்று) காலை 6 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். மேலும் நாளை(புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தவும், 18–ந் தேதி முதல் காலவரையற்ற விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தவும் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி போராட்டம் நடைபெறும்‘ என்றனர்.
சேலம் தெற்கு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வட்ட தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதேபோல், சேலம் மேற்கு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மேற்கு வட்ட கிளையின் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.